மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய கடந்த 2018-ல் ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு 2019 டிசம்பரிலேயே முதல்வர் பினராயி விஜயனிடம் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தது. ஆனாலும், கடந்த நான்கு ஆண்டுகளாக அறிக்கை வெளியிடப்படாமல் இருந்த நிலையில், மலையாள ஊடகத்தைச் சேர்ந்த சிலர் கடந்த சில நாள்களுக்கு முன்பு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அந்த அறிக்கையைப் பெற்று வெளியிட்டனர்.
அந்த அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, மலையாள பிரபல இயக்குநர் சித்திக், ரஞ்சித் உட்பட பலர் மீது நடிகைகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதன் எதிரொலியாக, மலையாள திரைப்பட சங்கமான அம்மா-வில் (Association of Malayalam Movie Artistes) பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சித்திக் விலகினார். அவரைத் தொடர்ந்து, மலையாள சினிமா அகாடமி தலைவர் பதவியிலிருந்து ரஞ்சித் விலகினார். இவர்களைத் தொடர்ந்து, அம்மா-வில் தலைவர் பொறுப்பிலிருக்கும் மோகன்லால் உட்பட மற்ற பொறுப்புகளிலிருக்கும் அனைவரும் கூட்டாகப் பதவியை ராஜினாமா செய்திருக்கின்றனர்.