TVK Vijay: `விக்கிரவாண்டியில் த.வெ.க முதல் மாநாடு?’ – காவல்துறையிடம் மனு அளித்த புஸ்ஸி ஆனந்த்
நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம், `தமிழ்நாடு வெற்றிக் கழகம்” என்ற கட்சியைத் தொடங்கினார். நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கவில்லை என்றாலும், `2026 சட்டப்பேரவைத் தேர்தலே எங்கள் இலக்கு’ எனத் தெரிவித்து, நிர்வாகிகள் நியமனம், உறுப்பினர்கள் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வந்தனர். இத்தகைய சூழலில், அண்மையில் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி ஏற்றிவைத்தார், அந்தக் கட்சியின் தலைவர் விஜய். கட்சி பாடலும் வெளியிடப்பட்ட நிலையில், `கட்சிக் கொடி குறித்த விளக்கத்தையும், கட்சிக் கொள்கை உள்ளிட்டவை குறித்தும் விரைவில் மாநாட்டில் தெரிவிப்பேன்’ என விஜய் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, த.வெ.க நிர்வாகிகள் மாநாடு தொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். த.வெ.க கொடி அறிமுக விழாவுக்கு முன்பாகவே, கட்சியின் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்துவது குறித்து உறுதி செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் செப். 23-ம் தேதி நடைபெறவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்த மாநாட்டுக்கு அனுமதி கோரி த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறார்.