இந்தப் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் பலன்கள் குறித்து மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் எல்.நாகேஸ்வரராவ செய்தியாளர்களிடம் பேசும்போது, “மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு ஆகஸ்டு 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், 01.01.2004 முதல் பணியமர்த்தப்பட்ட ரயில்வே ஊழியர்கள் உட்பட 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் இந்த புதிய ஓய்வு ஊதிய திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.
இந்த புதிய ஓய்வூதிய திட்டம் 01.4.2025 முதல் அமுலுக்கு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் உறுதியான ஓய்வூதியம், உறுதியான குடும்ப ஓய்வூதியம், உறுதியான குறைந்தபட்ச ஓய்வூதியம், கருணைத்தொகை, பணவீக்க அட்டவணைக்கேற்ப ஓய்வூதிய பண பலன்கள் வழங்கப்படும்.
தெற்கு ரயில்வேயில் தற்போது ரயில்வே ஊழியர்களின் எண்ணிக்கை 81,311 ஆகும். இதில் 689 ரயில்வே அதிகாரிகள் மற்றும் 17,916 ஊழியர்கள் உட்பட மொத்தம் 18,605 பேர் பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளனர். மீதமுள்ள 439 ரயில்வே அதிகாரிகள் மற்றும் 62,267 ஊழியர்கள் உட்பட மொத்தம் 62,706 பேர் இந்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு விருப்பம் தெரிவிக்க தகுதி பெற்றவர்கள்.