சர்வதேச நாடுகள் பலவும் உற்றுநோக்கிய உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா முடிந்திருக்கிறது. இத்திருவிழாவின் வெற்றிச்செல்வர்்கள்… வேறு யார்? இந்திய மக்கள்தான். இது, காலங்காலமாக சொல்லப்படுவதுதான். என்றாலும், ஒவ்வொரு கால கட்டத்திலும் அதைச் சொல்லும்போது அழுத்தமான கூடுதல் காரணங்கள் இருக்கும். இம்முறையும் அப்படியே!
கடந்த பத்தாண்டுகள் இந்தியாவின் பிரதமராக இருந்த மோடி, மூன்றாவது முறையாக பிரதமர் ஆகியிருக்கிறார். தனிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும், தனிப்பெரும் கட்சியாக… கூட்டாகப் போட்டியிட்ட கட்சிகளுடைய வெற்றியையும் சேர்த்து, அவருக்குத்தான் வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள், மக்கள். இந்த வெற்றிக்கு ஊடாக ஓர் அழுத்தமான செய்தியை வெளிப்படையாகவும் விளக்கமாகவும் உலகத்துக்கே புரியும் வகையிலும் சேர்த்துச் சொல்லியிருக்கிறார்கள். அது, ‘ஒன்றாக இருப்போம்… நன்றாக இருப்போம்” என்பதுதான்!