நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், அதற்கு முன்னதாக வெளியான பல்வேறு கருத்துக் கணிப்புகளை நசநசத்து போக வைத்துவிட்டது. பல்வேறு மாநிலங்களில் பாஜக அதிக இடங்களை வெல்லும் என்று சொன்ன நிலையில், அக்கட்சி குறைவான இடங்களிலே வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஒருசில மாநிலங்களில் ஆளும் கட்சிகள் கூடுதல் இடங்களும், சில இடங்களில் குறைவான இடங்களும் வெற்றி பெற்றிருக்கின்றன. அதேபோல பல்வேறு மாநிலங்களில் பிரதான கட்சியின் வாக்கு சதவிகிதமும் கடுமையாகக் குறைந்திருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, மொத்தமுள்ள 39 இடங்களில் அனைத்து தொகுதிகளிலும் ஆளும் திமுக கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது. இருந்தபோதிலும், கடந்த முறையை விட ஆறு விழுக்காடு வாக்கு சதவிகிதம் குறைந்திருப்பதும் முக்கியமான பேசுபொருளாகியிருக்கிறது.
அதாவது, 2019 மக்களவைத் தேர்தலில், திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐயுஎம்எல், கொமதேக என 8 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அப்போது, 38 தொகுதிகளில் வெற்றி பெற்று, 53 சதவீதம் வாக்குகளைப் பெற்றது இந்த கூட்டணி. இந்த தேர்தலிலும் 8 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இறுதி நிலவரப்படி, திமுக கூட்டணி 46.97 சதவீதம் வாக்குகளை தான் பெற்றது.
தனிப்பட்ட முறையில் கட்சிவாரியாக பார்த்தால், கடந்த 2019-ல் 33.53 சதவீதம் வாக்குகள் பெற்ற திமுக, இந்த தேர்தலில் 26.93 சதவீதம் தான் பெற்றது. 12.72 சதவீதம் பெற்ற காங்கிரஸ் தற்போது 10.67 சதவீதமும், இந்திய கம்யூனிஸ்ட் 2.41 சதவீதத்துக்கு பதில் 2.15 சதவீதமும் வாக்குகளை பெற்றுள்ளன. அதே நேரம், கடந்த முறை 2.38 சதவீதம் வாக்குகள் பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தற்போது 2.52 சதவீதமும், ஐயுஎம்எல் கடந்த முறையைப் போல் தற்போதும் 1.1 சதவீதமும் வாக்குகளை பெற்றுள்ளது.
ஆளும் அரசின் வாக்கு சதவிகிதம் இந்தளவுக்குக் குறைந்திருப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்தும் இது வரும் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா என்பது குறித்தும் விரிவாக விசாரித்தோம்.