ஒடிசா முதல்வராக மோகன் சரண் மஜி தேர்வு!
ஒடிசா மாநிலத்தில் ஆட்சியமைக்கும் பாஜக, முதலமைச்சராக மோகன் சரண் மஜியைத் தேர்வு செய்திருக்கிறது. மோகன் சரண் மஜி, நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஜூன் 12-ம் தேதி ஒடிசாவில் பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்கிறது!
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு!
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி, முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரத்தின்போது மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து, விக்கிரவாண்டி தொகுதி கலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, அன்னியூர் சிவா என்பவரை திமுக தனது வேட்பாளராக அறிவித்திருக்கிறது. இவர், திமுக-வின் விவசாய தொழிலாளர் அணியின் செயலாளர் என்று கூறப்படுகிறது.
வீடுகளில் கழிவறை மூலமாக வெளியேறிய விஷவாயு! – பெண்கள் பலியான சோகம்
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புது நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் வடிக்காலில் இருந்து கசிந்த விஷவாயு வீடுகளில் உள்ள கழிவறை மூலமாக வெளியேறியதால், இரண்டு பெண்கள் உயிரிழந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வீட்டிலிருந்து வெளியேறுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதிக்கு நகராட்சி ஊழியர்கள் அந்த கழிவு நீர் வாடிக்காலை சரி செயயும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
திருச்சி விமான நிலைய புதிய முனையம் பயன்பாட்டுக்கு வந்தது!
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் 2ஆவது புதிய முனையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.
ஏற்கெனவே இருந்த முனையம் மூடப்பட்ட நிலையில் 2ஆவது புதிய முனையம் செயல்படத் தொடங்கியது.