பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைச்சரவை பதவியேற்று, புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்ததைப் போலவே, ராஜ்நாத் சிங்க்கு பாதுகாப்புத்துறை, அமித் ஷாவுக்கு உள்துறை, நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை. ஜெய்சங்கருக்கு வெளியுறவுத்துறை என வழங்கப்பட்டிருக்கின்றன.
முந்தைய மோடி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 37 அமைச்சர்கள் தற்போதைய அமைச்சரவையில் இடம்பெறவில்லை. அவர்களில் 18 பேர் மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்துவிட்டனர் என்பது குறிப்படத்தக்கது.
இதற்கு முன்பு, 2014, 2019 என இரண்டு முறை மோடி தலைமையில் ஆட்சி அமைந்தாலும், அதில் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தாலும் அது ‘மோடி சார்க்கார்’ என்றே அழைக்கப்பட்டது. இந்த முறைதான் கூட்டணி ஆட்சி என்று குறிப்பிடப்படுகிறது. மொத்தம் 71 அமைச்சர்களில், 11 பேர் மட்டுமே கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.
பா.ஜ.க-வின் தேசியத் தலைவரான ஜே.பி.நட்டா, அமைச்சராகியிருக்கிறார். இவர், மோடி தலைமையிலான முதலாவது அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். அதே துறை இந்த முறை அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
புதிய அமைச்சரவையில் 33 பேர் புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய அமைச்சரவையில் 10 பெண்கள் இடம் பெற்றிருந்தனர். அந்த எண்ணிக்கை இந்த முறை ஏழாகக் குறைந்துவிட்டது. தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமாரும் அமைச்சரவையில் தங்கள் கட்சிகளுக்கு முக்கியத் துறைகளை ஒதுக்க வேண்டும் என்று பா.ஜ.க-விடம் தீவிரமாக வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகின.
குறிப்பாக, ரயில்வே துறையை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென்று நிதிஷ் குமார் வலியுறுத்தினார் என்றெல்லாம் செய்திகள் தெரிவித்தன. ஆனால், அப்படி சொல்லப்பட்டதைக் காட்டிலும் மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் இந்த இரு கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. மோடி அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாகக் கூறிய லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான், கேபினட் அமைச்சராகியிருக்கிறார்.
அதேபோல, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவரான ஜிதன்ராம் மாஞ்சி கேபினட் அமைச்சராகியிருக்கிறார். ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகித்து, தேர்தல் நெருங்கிய நேரத்தில் திடீரென பா.ஜ.க கூட்டணிக்கு தாவிய ராஷ்டிரிய லோக் தளத்தின் தலைவர் ஜெயந்த் சௌத்ரிக்கு தனிப்பெறுப்புடன் இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி, கேபினட் அமைச்சராகியிருக்கிறார்.
சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் கைகாட்டும் திசைவழியில்தான் மோடி 3.0 ஆட்சி செல்லும் என்ற அளவுக்கு அரசியல் நோக்கர்கள் ஆரம்பத்தில் கருத்து தெரிவித்தனர். ஆனால், இந்த இரு தலைவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இடங்களும், துறைகளும் தரப்படவில்லை. ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் சிங்குக்கு உள்ளாச்சித்துறை, மீன்வளம், கால்நடை ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ராம்மோகன் நாயுடுவுக்கு விமானப்போக்குவரத்துத்துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. கூட்டணிக் கட்சிகளின் அழுத்தம் இருப்பதால், முன்பிருந்த ஆட்சியைப்போல மோடி அரசால் இந்த முறை ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாக்களை தீவிரமாக செயல்படுத்த முடியாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அதே நேரத்தில், பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை போன்றவற்றின் கொள்கைகளில் மாற்றங்கள் இருக்காது என்று சொல்லப்படுகிறது. அப்படியென்றால், கூட்டணிக் கட்சிகளே எதிர்க்கும் அக்னிவீரர் திட்டம் போன்ற திட்டங்கள் தொடருமா என்பதை வரும் நாள்களில் தான் தெரிய வரும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88