தமிழ்நாடு பதிவெண் இல்லாமல் வெளிமாநில பதிவெண்களோடு இயங்கும் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு வரும் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அதிரடியாக அறிவித்திருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகின்றன. அரசு பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து மட்டுமல்லாமல் தனியார் ஆம்னி பேருந்துகளும் மாநிலத்தின் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்தாக திகழ்ந்துவருகிறது. குறிப்பாக, தலைநகர் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி என மாநிலத்தின் முக்கிய மாநகரங்களுக்கு பயணிகளின் வசதிக்கேற்ப, சொகுசான போக்குவரத்து சேவைகளையும் வழங்கி வருகின்றன. அதேநேரம், வார இறுதி விடுமுறைகள், விழா காலங்கள், பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களில் அதிகப்படியான கட்டணம் வசூலித்து சட்ட விதிமீறல்களிலும் தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர் தொடர்ந்து ஈடுப்பட்டு வருவதாக எழும் குற்றச்சாட்டுகளும் தொடர்கிறது.


வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள்:
அதேபோல, தமிழ்நாடு போக்குவரத்துச் சட்டப்படி, தமிழ்நாடு (TN) பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள்தான் தமிழ்நாட்டிற்குள் தொடர்ந்து இயக்கப்பட வேண்டும். ஆனால், கணிசமான ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அண்டை மாநிலங்கள் மட்டுமல்லாமல் அஸ்ஸாம் வரையிலான வெளிமாநிலங்களின் பதிவெண் கொண்டு பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்கி வருகின்றனர். இந்த விதிமீறலாம் தமிழ்நாடு அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, `தமிழ்நாடு பதிவெண் இல்லாத ஆம்னி பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்கக்கூடாது, அப்படி இயக்கவேண்டுமானால் வெளிமாநில பேருந்துகளின் பதிவெண்ணை தமிழகப் பதிவெண்ணாக மாற்ற வேண்டும்” என தமிழ்நாடு போக்குவரத்து துறை பல ஆண்டுகளாக தனியார் போக்குவரத்து உரிமையாளர்களையும் சங்கத்தினரையும் வலியுறுத்திவருகின்றனர். மேலும், ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப கால அவகாசத்தையும் நீட்டி வந்தனர். ஆனால், கணிசமான பேருந்து உரிமையாளர்கள் தொடர்ந்து வெளிமாநில பதிவெண்ணுடனே தங்களின் பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.