Beef: `ஃபிரிட்ஜில் மாட்டுக்கறி' – 11 பேரின் வீடுகள் இடிப்பு… ம.பி-யில் போலீஸ் நடவடிக்கை!

மத்தியப் பிரதேசத்தில் பசுவதைக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் சட்டவிரோதமாக மாட்டுக்கறி வர்த்தகம் நடந்து வருகிறது. அவ்வாறு மாட்டுக்கறி வியாபாரம் செய்பவர்களுக்கு எதிராக போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நாட்டின் சில இடங்களில் பசுவை வாகனங்களில் கடத்தியவர்களை பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் அடித்து கொலை செய்த சம்பவங்களும் நடந்திருக்கிறது. மத்தியப் பிரதேசத்தின் மண்ட்லா அருகில் உள்ள பைன்வாஹி என்ற இடத்தில் சட்டவிரோதமாக இறைச்சிக்காக பசுமாடுகள் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே அப்பகுதிக்கு போலீஸார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து சென்றனர். அங்கு இறைச்சிக்காக 150 மாடுகள் கட்டி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை மீட்ட அதிகாரிகள் மாடுகள் கட்டி வைத்திருந்தவர்களின் வீட்டில் சோதனை செய்தனர். அங்கு அவர்களின் வீட்டில் இருந்த ஃபிரிட்ஜில் இறைச்சி இருந்தது.

அந்த இறைச்சியை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை சோதனை செய்த போது அவை மாட்டு இறைச்சி என்று தெரியவந்தது. இதையடுத்து மாடுகளை கட்டி வைத்திருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டார். மேலும் 10 பேர் தலைமறைவாகிவிட்டனர். பசுமாடுகளை இறைச்சிக்காக கட்டி வைத்திருந்த மற்றும் வீட்டில் இறைச்சியை மறைத்து வைத்திருந்த 11 பேரின் வீடுகளை அதிகாரிகள் புல்டோசர் உதவியுடன் இடித்துத் தள்ளினர். அந்த வீடுகள் அரசு நிலத்தில் கட்டப்பட்டு இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

வீடுகள் இடிப்பு

இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் ரஜத் கூறுகையில், ”குற்றவாளிகளின் வீட்டில் ஒரு அறையில் மாட்டுத் தோல், கொழுப்பு, எலும்புகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்றார். குற்றம்சாட்டப்பட்ட 11 பேரும் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மத்தியப் பிரதேசத்தில் பசுவதையில் ஈடுபடுபவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *