தோல்வி பயத்தால்தான் தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என சிலர் பேசுவது உச்சபட்ச உளறலாக உள்ளது.
தவறானவர்கள் கையில் இரட்டை இலை இருக்கிறது என்று தொடர்ந்து விமர்சித்து வருகிறவர்கள், இன்றைக்கு முகவரி இழந்து, அங்கீகாரம் இழந்து அடைக்கலம் புகுந்திருக்கிற இடத்திற்கு விசுவாசத்தை காட்டுவதற்காக தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். இரட்டை இலை சின்னம் தவறானவர் கையில் இல்லை, விசுவாசத் தொண்டன் கையில் உள்ளது என்பதை நினைவுபடுத்துகிறேன்.
அதிமுக, பல தேர்தலை சந்தித்திருக்கிறது, எம்.ஜி.ஆர் காலத்தில் கோட்டையின் பக்கமே கருணாநிதியால் எட்டிப் பார்க்க முடியாதவகையில் தொடர் வெற்றியை பெற்றார். அதே நேரம், நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி பெறாமல் இரண்டு உறுப்பினர்கள் மட்டும் இருந்த காலமும் உண்டு.
ஜெயலலிதா தலைமையில் ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுது 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு கோடி வாக்குகளையும், திமுக ஒரு கோடி 64 லட்சம் வாக்குகளையும் பெற்றது. அதனைத் தொடர்ந்து 2011-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மையோடு ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்தார்கள், திமுக-வுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்துகூட இல்லாத ஒரு நிலையை மக்கள் ஏற்படுத்தினார்கள்.
ஏதோ அதிமுக மட்டும்தான் இடைத்தேர்தலை புறக்கணித்தது போல தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். புதுக்கோட்டை இடைத்தேர்தலை திமுக புறக்கணித்தது. அதன் பின் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்ததையும், பின்பு தேர்தலை புறக்கணித்ததையும் நினைவு படுத்துகிறேன். அதனால் திமுக அழிந்து போய்விட்டதா? காணாமல் போய்விட்டதா?