நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த அடுத்த நாளில் இருந்தே தி.மு.க-வில் அமைச்சரவை மாற்றம் இருக்கும், உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்படுவார், மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் இருக்கும் என்ற பேச்சு பரவலாகக் கேட்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால், தலைமையிலிருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்தச் சூழலில், உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்படுவது குறித்து அமைச்சர்கள் வெளிப்படையாகவே பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.
ராமநாதபுரத்தில் இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், “அமைச்சர் உதயநிதி ஸ்டலின் வகிக்கும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் வளர்ச்சித் திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது” என்றவர், “துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்” எனச் சொல்ல, சட்டெனச் சுதாரித்துக்கொண்டவர்போல, “வரும் 19-ம் தேதிக்குப் (ஆகஸ்ட்) பிறகுதான் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் எனக் கூற வேண்டும். அதற்கு முன்பு சொல்லக்கூடாது” என்றார்.
அதற்கு அடுத்தநாள் தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகைக்காக 1 கோடியே 50 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, அதில் ஒரு கோடிக்கும் மேலானவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ளவர்கள் மனுக்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருங்கால துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துறையின் கீழ் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது” எனப் பற்ற வைத்தார்.


திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சராக ஆகும் தகுதி இருக்கிறது, இளைஞர் அணி செயலாளர் எந்த உயரத்திற்கும் வரலாம்” எனப் பேசினார்.
தொடர்ந்து அமைச்சர்கள் உதயநிதியைத் துணை முதல்வராக வைத்துப் பேசுவதும் கட்சியில் அடுத்தடுத்து நடக்கும் கூட்டங்களில் உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதையும் வைத்து எதிர்க்கட்சிகளும் விமர்சனங்களை முன்வைத்தனர். அமைச்சர்கள் பேச்சும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களையும் வைத்து உதயநிதியைத் துணை முதல்வராக்க ஆளுந்தரப்பு முடிவு செய்திருக்கிறதா என்ற விசாரணையில் இறங்கினோம்.