நிலமோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் நிலத்தை, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்ட நிலையில், சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த நிலையில், ஜாமின் மற்றும் சிபிசிஐடி காவல் ஆகிய மனுக்கள் கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. இதற்காக, திருச்சி மத்திய சிறையில் இருந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிக்குவாரா ரவுடி சம்போ செந்தில்? – போலீஸ் ஸ்கெட்ச்!
அப்போது, எம்.ஆர்.விஜயபாஸ்கரை 7 அல்லது 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி கோரிக்கை விடுத்தது. பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எம்.ஆர்.விஜயபாஸ்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி அளித்தார்.
எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தும் போது அதிமுக வழக்கறிஞர் ஒருவர் உடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்த நிலையில், சிபிசிஐடி விசாரணையின் போது யாருடைய தலையீடோ, குறுக்கீடோ இருக்க கூடாது என உத்தரவிட்டார்.
இதனையடுத்து, கரூர், திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் எம் ஆர் விஜயபாஸ்கரிடம் சிபிசிஐடி காவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
.