முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க செல்லவுள்ள நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள தென் திசையின் தீர்ப்பு என்ற நூலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட, பொருளாளர் டி.ஆர்.பாலு பெற்றுக்கொண்டார். நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் திமுக கூட்டணி பெற்ற வெற்றி குறித்து புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
மேலும், கலைஞர் கருணாநிதிக்கு நாணயம் வெளியிடவுள்ள மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே சமயம் நிதி பகிர்வில் வஞ்சனை காட்டுவதாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக பவள விழா வரும் செப்டம்பர் 17ஆம் தேதி சென்னையில் கொண்டாடப்படுவது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றாலும் கட்சி மற்றும் அரசு பணிகளை அங்கிருந்து கவனிப்பேன் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம் எனவும், சுணக்கமின்றி செயல்பட்டால் அடுத்த முறையும் திமுக ஆட்சிதான் அமையும் என்றும் முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை மாவட்ட செயலாளர்கள் கவனத்தில் வைத்துக் கட்சி மற்றும் தேர்தல் பணியை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியதாகவும் புகாருக்கு உள்ளாகி உள்ள சில மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்ததாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சார்பு அணிகளை மாவட்டச் செயலாளர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்திய முதலமைச்சர், அனைத்து பூத் கமிட்டிகளையும் முழுமையாக அமைக்க வேண்டும் என கூட்டத்தில் கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
திமுகவின் அனைத்து அமைப்புகளிலும் செப்டம்பர் 15க்கு முன்பாக உறுப்பினர் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் அதன் மினிட் புத்தகம் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
உழைப்பின் அடிப்படையிலேயே கட்சி பதவிகளில் உயர்வு இருக்கும் என்று திட்டவட்டமாக முதலமைச்சர் கூறியதாகவும், திமுகவை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க அர்ப்பணிப்போடு செயல்பட அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளரின் வாக்கு குறைந்ததற்கான காரணத்தையும் திமுக தலைவர் மாவட்ட செயல் கூட்டத்தில் கேட்டுள்ளார்.
நெல்லை மாநகராட்சியில் திமுக மேயர் வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்டவருக்கு 23 கவுன்சிலர் வாக்களித்த நிலையில், கவுன்சிலர்கள் யாராவது தவறு செய்தால் அவர்கள் மீது பதவிப்பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படுவது குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது குறித்து எதுவும் பேச வில்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்தாலும் கட்சி மற்றும் அரசு பணிகளை அங்கிருந்து கவனிப்பேன் என்று முதலமைச்சர் தெரிவித்திருப்பது, தற்போதைக்கு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க மாட்டார் என சூசகமாக தெரிவிக்கப்பட்டு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றன.
.