சிறந்த இணைய தொடருக்கான நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் மகுடம் விருது ‘அயலி’ – க்கு வழங்கப்பட்டது.
கலை, இலக்கியம், சினிமா, விளையாட்டு, சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்தியவர்களை கவுரவிக்கும் வகையில் நியூஸ் 18 தமிழ்நாடு ‘மகுடம்’ விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்தவர்களை உச்சி முகரும் வகையில் இந்த ‘மகுடம்’விருது சூட்டப்படுகிறது. பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தவர்களை அலசி ஆராய்ந்து, துறைசார் வல்லுநர்கள் குழு மூலம் தேர்வு செய்து, கடந்த 2017 முதல் நியூஸ் 18 தமிழ்நாடு மகுடம் சூட்டி வருகிறது.
இந்நிலையில் 2024ம் ஆண்டுக்கான மகுடம் விருது விழா சென்னையில் கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த விழாவில் அரசியல் ஆளுமைகள், நீதியரசர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த விழாவில் 2024 ஆண்டுக்கான சிறந்த இணைய தொடராக (வெப் சீரிஸ்) அயலி தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை இயக்குநர் முத்துகுமாரிக்கு நடிகை நமீதா மற்றும் கேவின்கேர் நிறுவன மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் பிரேம் சாகர் ஆகியோர் வழங்கினர்.
இளைய தலைமுறையை ஈர்க்கும் வகையில் இணையத் தொடர்கள் அறிமுகமான காலகட்டத்தில், சஸ்பென்ஸ் கதைகளே ஆக்ரமித்துக் கொண்டிருந்த ஓடிடி தளங்களில் சமூகப் பிரச்னையைப் பேசிய அயலி தொடர் வெளியானது..
அயலி இணைய தொடரில் பருவமடைந்த பெண்களுக்குப் பள்ளிப்படிப்பு இல்லை.. ஊர் எல்லை தாண்டுவது உலகமகா குற்றம் என கட்டுப்பாடுகளை விதிக்கிறது ஆணாதிக்க சமூகம்..
மருத்துவம் படிக்க விரும்பும் தமிழ்ச்செல்வி, அந்த பழைமைவாத கிராமத்தின் தடைக்கற்களை தகர்த்துக் கனவைக் கைப்பற்றுகிறாளா? என்பதை சொல்கிறது அயலி தொடர்..
பார்வையாளர்கள் அயற்சி அடையாமல், அடைகாக்க வைக்கும் திரைக்கதையும், வாள் வீச்சுப் போன்ற வசனங்களும் அயலிக்கு பலமாக அமைந்தது. அபி நக்ஷத்ரா, அருவி மதன், அனு மோள், சிங்கம்புலி என நிறைவாகத் திரையை நட்சத்திரங்கள் நிறைத்தனர்.
கிராமத்துச் சூழலை கண்முன் கொண்டு வந்த ஒளிப்பதிவாளர் ராம்ஜி, தேவையான இடங்களில் தெவிட்டாமல் இசைவார்த்த இசையமைப்பளர் ரேவா, 8 எபிசோட்களையும் செதுக்கிய எடிட்டர் கணேஷ் சிவா, எல்லோரையும் ஒரு கோட்டுக்குள் இணைத்த இயக்குனர் முத்துக்குமார் என மொத்தக் குழுவும் ஒத்த மனதாய் உழைக்க உயர்ந்து நின்றது அயலி..
2024 ஆம் ஆண்டின் சிறந்த இணையத் தொடருக்கான விருதை அயலிக்கு வழங்குவதில் நியூஸ் 18 தமிழ்நாடு பெருமிதம் கொள்கிறது.
.