எம்.ராதாகிருஷ்ணன், அறப்போர் இயக்கம்:
“அரசு ஊழியர்களின் ஓய்வு வயது அதிகரிப்பு என்பது பல லட்ச இளைஞர்களின் வேலைவாய்ப்பு சம்மந்தப்பட்டது ஆகும்.
இன்னொரு பக்கம், ஒவ்வொரு துறைக்கும் அதில் இருக்கும் பிரிவுகளுக்கும் ஏற்ப ஊழியர்களின் பணி மாறுபடும். இதனால் ஓய்வு வயதைக் கூட்டும்போது தூய்மை பணியாளர்கள் போன்ற வேலைப்பிரிவுகளில் இருப்பவர்களின் உடல்நிலையை கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் இன்றைய காலக்கட்டத்தில் தினம் தினம் தொழில்நுட்பங்கள் வளர்ந்துக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் பணி ஓய்வுக்காலத்தை அதிகரிக்கும்போது, இவர்களால் அந்தத் தொழில்நுட்பத்தை எளிதாக ஏற்றுக்கொண்டு செயல்பட முடியுமா என்பது பெரிய கேள்விக்குறி.
இவை அனைத்தையும் வைத்து மட்டும் ‘இப்போதிருக்கும் பணி ஓய்வுக்காலமே போதும்’ என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. அதனால் பணி ஓய்வு வயதைத் நிர்ணயம் செய்ய நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும். அவர்களின் பரிந்துரைப்படி ஓய்வு வயதை முடிவு செய்வது அனைவருக்கும் நல்லது.
இப்போது அரசு தரப்பில் இந்த செய்தி வதந்தி என்று கூறியுள்ள போதும், இது போன்ற வதந்திகள் மீண்டும் வந்து கொண்டே தான் இருக்கும். எனவே, இது போன்ற செய்திகளுக்கு விளக்கம் பொதுவெளியில் அறிவிக்கப்படவேண்டும்.
உதாரணத்திற்கு, ஏற்கனவே இருக்கும் உச்சபட்ச வயது எதன் அடிப்படையில் சட்டமாக்கப்பட்டது, அதற்கான விளக்கமும் சேர்த்து சொல்லப்படவேண்டும்.”