அறுபது ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த சர்க்கரை ஆலையை திறக்கச் சொல்லி போராடி வரும் கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாத நிலையில், தற்போது ஆலைக்குள் சினிமா சூட்டிங் நடத்த அனுமதித்ததாக விவசாயிகள் புகார் எழுப்பியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஜல்லிக்கட்டால் மட்டுமல்ல, இந்த ஆலையாலும் அலங்காநல்லூர் புகழ்பெற்றது. தமிழகத்திலுள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் மிகப்பெரிய மற்றும் 60 ஆண்டுகளாகச் சிறப்பாக இயங்கி வந்த ‘அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை’ மூடப்பட்டு 5 ஆண்டுகளாகிவிட்டது. இதன் மூலம் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட கரும்பு விவசாயிகள் பயனடைந்து வந்தனர். தமிழகத்தில் தனியாருக்கு 26, கூட்டுறவுத்துறைக்கு 16, பொதுத்துறைக்கு 2 என மொத்தம் 44 சர்க்கரை ஆலைகள் உள்ளன. 1963-ல் தொடங்கப்பட்ட இந்த ஆலையால் கரும்பு விவசாயிகள் பயனடைந்தது ஒருபக்கமென்றால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான பேர் வேலைவாய்ப்பைப் பெற்று வந்தனர். அதை சார்ந்து பல்வேறு தொழில்களும் வளர்ந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென மூடப்பட்டதால் தாங்கள் பல துன்பங்களுக்கு ஆளாகியிருப்பதாக, கரும்பு விவசாயிகளும், அங்கு வேலை பார்த்த ஊழியர்களும் குமுறுகின்றனர்.
ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஆலையை சூட்டிங் ஸ்பாட்டாக மாற்றுகிறார்கள் என்று புகார் எழுந்துள்ளது.
கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பழனிசாமியிடம் இது குறித்துப் பேசினேன். “தமிழகத்தில் உள்ள 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மிக மோசமான நிலைமையில் உள்ளன. தமிழக அரசு, தனியார் சர்க்கரை ஆலைகள் பயன்பெறும் வகையில் அரசின் சர்க்கரை ஆலைகளில் உற்பத்தியை நிறுத்தி வருகிறது.
நிர்வாக குறைபாட்டால் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அலங்காநல்லூர் ஆலை மூடப்பட்டது. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஆலையை திறப்போம் என்றார்கள். நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திய பின் 2022-ல் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து அரசுக்கு அனுப்பினார்கள். பின்பு அதை அப்படியே விட்டுவிட்டார்கள். மாவட்ட அமைச்சருக்கோ, சோழவந்தான் எம்.எல்.ஏ-வுக்கோ இந்த ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என்பதில் எந்த ஆர்வமும் இல்லை. நிலுவையில் உள்ள சம்பளத்துக்கு 14 கோடி, இயந்திர பராமரிப்புக்கு 13 கோடி என தமிழ்நாடு அரசு 27 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தால் போதும், ஆலையை இயக்கிவிடலாம். பல்வேறு விஷயங்களுக்கு அரசு நிதி ஒதுக்கும்போது, கரும்பு விவசாயிகள், ஆலைத் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்னைக்கு நிதி ஒதுக்க யோசிக்கிறார்கள். ஆலையை திறந்தால் லோடு மேன், சிறு வியாபாரிகள் என அதைச் சார்ந்து ஒரு லட்சம் பேர் பயனடைவார்கள். ஆலை இயங்காததால் இங்கே வந்த கரும்புகளை தனியார் ஆலைக்கு கொண்டு போய்விடுகிறார்கள். ஒருவேளை இந்த ஆலை இப்படியே இயங்காமல் கிடந்தால் விலைக்கு வாங்கிவிடலாம் என்று அதிகாரத்தில் உள்ளவர்கள் நினைக்கிறார்கள்போல. எங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் ஆலை வளாகத்துக்குள் சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதித்துள்ளார்கள். ஏற்கெனவே ஆலைக்குள் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் காணாமல் போய் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் சூட்டிங் நடத்த அனுமதிப்பது எப்படி சரியாகும்? இது கூட்டுறவு ஆலை, பொதுக்குழுவை கூட்டி சினிமா எடுக்க அனுமதிக்கலாமா என்று அதிகாரிகள் கேட்டிருக்க வேண்டும். ஆலையை இயங்க வைக்க முயற்சி எடுப்பதைத் தவிர மற்ற அனைத்து வேலைகளையும் செய்யும் அரசின் செயல்பாட்டை எதிர்த்து மீண்டும் உயர் நீதிமன்றம் செல்லப்போகிறோம்” என்றார்.
இது குறித்து ஆலையின் அலுவலக மேலாளர் அய்யம்பெருமாளிடம் கேட்டேன். “சென்னையிலுள்ள சர்க்கரைக் கழக ஆணையர் அலுவலகத்தில் அனுமதி வாங்கி வந்துதான் சூட்டிங் எடுத்தார்கள். அதற்கு ஒரு நாளுக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் கட்டணம் செலுத்தியுள்ளார்கள். வளாகத்தில்தான் சூட்டிங் நடத்தினார்கள். வேறொன்றும் பிரச்னை இல்லை. ஆலையை இயங்க வைக்க அரசுதான் முடிவெடுக்க வேண்டும்” என்றார், சுருக்கமாக.
சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று சோழவந்தான் எம்.எல்.ஏ வெங்கடேசனிடம் கேட்டதற்கு, “அந்த ஆலையை மீண்டும் இயக்குவது குறித்து சட்டசபையில் தொடர்ந்து பேசி வருகிறேன்.
கரும்பு விவசாயிகள் மட்டுமல்ல, அங்கு வேலை பார்த்த ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனக்கு அந்த ஆலை குறித்த பிரச்னைகள் அனைத்தும் தெரியும். ஆரம்பத்தில் தி.மு.க ஆட்சியில் அதிக நிதி ஒதுக்கி சிறப்பாகச் செயல்பட்டது. அடுத்து வந்த அ.தி.மு.க ஆட்சியில் செயல்பட்ட போர்டு இஷ்டத்துக்கு செலவு செய்து, எதிர்காலத்தை திட்டமிட்டு செயல்படாததால் இந்த நிலைக்கு வந்துள்ளது. மூடப்படுவதற்கு முன் கரும்பு விவசாயிகளுக்கு பணம் வழங்காமல் சென்றார்கள். அதை தி.மு.க ஆட்சியில்தான் செட்டில் செய்தோம். தற்போது ஆலையை ரன் செய்ய நிறைய முதலீடு செய்ய வேண்டும், தொடர்ந்து இதற்காக நான் அமைச்சருடன் சேர்ந்து அரசை வலியுறுத்தி வருகிறேன். மற்றபடி சினிமா சூட்டிங்கிற்கு அனுமதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை, விசாரிக்கிறேன்” என்றார்.
இது குறித்து ஆலையின் அலுவலர்கள், தொழிலாளர்கள், ஊர்கார்கள் சிலர் நம்மிடம், “ஆலையை மூடுவதற்கு நிர்வாகம் சொன்ன காரணம் அரவைக்கு தேவையான கரும்பு வரவில்லை என்பதுதான். ஆனால், கரும்பு பற்றாக்குறையெல்லாம் இல்லை. இப்போது அறிவித்தாலும் டன் கணக்கில் கரும்பு வரும். தயாரிப்பு செலவு அதிகரித்த நிலையில் சர்க்கரை விலையை அரசால் ஏற்ற முடியாததுதான் உன்மையான காரணம். அத்தியாவசியமான சர்க்கரை விலையை காலத்துகேற்ப உயர்த்தியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. அது மட்டுமன்றி ஆலை வளாகத்தில் 2011-ல் மின்சார உற்பத்திக்காக 110 கோடி ரூபாய் மதிப்பில் திட்டப் பணிகளை தொடங்கினார்கள்.
அ.தி.மு.க அரசு அந்த மின்சார திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருந்தால், அரசுக்கு வருவாய் கிடைத்திருக்கும். அதன் மூலம் ஆலையின் நஷ்டத்தை குறைத்திருக்கலாம். தற்போது அந்த இயந்திரங்களை பிரித்து வேறு வேறு ஆலைகளுக்கு கொண்டு செல்கிறார்கள்.
இது போன்ற ஒரு ஆலையை மீண்டும் உருவாக்குவது சாதாரணமானது அல்ல. காலத்துக்கு ஏற்ப அப்டேஷன் செய்திருக்க வேண்டும். இந்த ஆலைக்கு வந்து கொண்டிருந்த கரும்புகள் சிவகங்கை, வாசுதேவநல்லூரிலுள்ள தனியார் ஆலைகளுக்கும் செல்லும் வகையில் அதிகாரிகளே செயல்பட்டதால்தான் இங்கு வரத்து குறைவு என காரணம் காட்டப்பட்டது. அலங்காநல்லூர் அருகே ஆண்டுக்கொருமுறை நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு பலகோடி ரூபாய் செலவில் அரங்கம் கட்டிய அரசு, இதற்கும் நிதியை ஒதுக்கலாம். இங்குள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக சம்பளம் வழங்கவில்லை. ஈ.பி.எஃப்-பில் கூட முறையாக பணம் செலுத்ததால் அதையும் எடுக்க முடியவில்லை. அது மட்டுமன்றி பல ஏக்கர் பரப்பளவில் விரிந்துகிடக்கும் இந்த ஆலையை சிலர் வைத்துள்ளதால் அதனாலேயே ஆலையை மீண்டும் இயக்க ஆர்வம் காட்டவில்லை என்றும் பேச்சுள்ளது. இதுவரை சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்காத நிர்வாகம், தற்போது மட்டும் அனுமதித்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது” என்றனர்