“சில மாதங்களுக்கு மட்டுமே பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நீடிக்கும் என ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் சொல்கிறார்கள். ஆனால், அதற்கான அறிகுறியே இல்லையே..?”
“பா.ஜ.க-வினருக்கு அனைவரையும் அரவணைத்துச் செல்லும் திறன் கிடையாது. ஒரு பக்கம் சார்பு மனநிலையில்தான் இருக்கிறார்கள். கூட்டணிக் கட்சியினரைக்கூட அரவணைத்துச் செல்லவில்லை. எனவேதான் இந்த முறை மக்கள், தேர்தல் முடிவுகள் மூலம் பா.ஜ.க-வுக்கு அடி கொடுத்தார்கள். ஆனால், தங்களிடமுள்ள குறைகளை மாற்றிக்கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் அவர்கள் தயாராக இல்லை. எனவேதான் பா.ஜ.க-வின் ஆட்சி நீண்ட நாள்கள் நிற்காது எனச் சொல்கிறோம்.”
“ஆனால், முக்கியத் துறைகளைத் தங்கள் வசமாக்கிக்கொண்டது, சபாநாயகர் தேர்வு, வாரணாசியில் கங்கா ஆரத்தி, காஷ்மீரில் சர்வதேச யோகா தினம், ஜி7 மாநாட்டுக்கு இத்தாலிக்குச் சென்றது என எதுவுமே மாறவில்லை என்பதுபோல காட்டிக்கொண்டிருக்கிறாரே பிரதமர் மோடி?”
“அவர்களுக்கு இதையெல்லாம் தவிர வேறு எதுவும் தெரியாது. பாசிசவாதிகளுக்கு அடிபணிந்து செல்லத் தெரியாது. அனைவரையும் அரவணைத்து, அன்போடு செல்வது அவர்களின் அகராதியிலேயே கிடையாது. அவர்களின் அழிவுக்கு இதுதான் காரணமாக இருக்கும்.”
“கர்நாடகா, தமிழகத்தில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி நடந்தபோதும், காவிரிப் பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை. பிறகு மத்தியில் ஆட்சியைப் பிடித்து என்ன செய்யப்போகிறீர்கள்?”
“இது இரண்டு மாநிலங்களுக்கு இடையிலுள்ள பிரச்னை. நிச்சயமாக இரு தரப்பும் தங்கள் பக்கமிருக்கும் நியாயத்தை முன்வைப்பார்கள். ஆகவே, நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பைப் பின்பற்ற வேண்டும். இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைக்கு ஒன்றிய அரசுதான் தீர்வு காண வேண்டும். ஆனால், அவர்கள் மாநிலங்களுக்கு இடையே பிரச்னைகளை உருவாக்கிவருகிறார்கள். ஆகவே, பா.ஜ.க ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் உரிய தீர்வு எட்டப்படும்.”
” ‘காவிரி விவகாரத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை தலையிட வேண்டும்’ என வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் சொல்கிறாரே?”
“நியாயமான கோரிக்கைதான். தீர்வு ஏற்படுத்த அகில இந்தியத் தலைமையும், தலைவர்களும் நிச்சயம் முயற்சி மேற்கொள்வார்கள். ஆனால், கர்நாடகா ஒவ்வொரு முறையும் இப்படி நடந்துகொள்வது முறையல்ல. சட்டப்படி நடந்துகொள்ள வேண்டும். சட்டத்தை மீறிச் செயல்படுகிறார்கள். தமிழகத்தை ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்துக்குச் செல்லவைப்பது முறையல்ல.”
” ‘நிலக்கரி ஊழல் தொடர்பாக முறையாக விசாரிக்கப்பட வேண்டும்’ என ராகுல் காந்தி கூறுகிறார். மறுபக்கம் அதானி – சபரீசன் சந்திப்பு நடந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் நிலக்கரி ஊழலில் உரிய விசாரணை நடக்குமா என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவிக்கின்றனவே?”
“அவர் ஏன் வந்து பார்த்தார்… எதற்காக வந்து பார்த்தார் என்று எனக்குத் தெரியாது. பிரபலமான தொழிலதிபர். தமிழகத்திலும் அவருக்குத் தொழில் இருக்கிறது. எனவே வந்திருக்கலாம். ஆனால், இதனால் விசாரணையில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதுதான் எனது விருப்பம்.”
“நீங்கள் ராஜினாமா செய்தபோது, உங்கள் மனைவியின் பெயரில் பல கோடி மதிப்புள்ள சுரங்கங்களைத் தனதாக்கிக்கொண்டு கொள்ளையடித்ததாக அண்ணாமலை கூறியது சர்ச்சையாக வெடித்திருக்கிறதே?”
“இதைப் பற்றி நான் என்ன கருத்து சொல்ல முடியும்… என்னைப் பற்றி அறிந்தவர்களுக்கு நான் எப்படிச் செயல்பட்டேன் என்பது நன்கு தெரியும். அன்று அண்ணாமலை பேசியதை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. இன்றும் அப்படித்தான் கடந்து செல்ல வேண்டும்.”
“இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்ட ஜூலை 25-ம் தேதியை ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ என்று அனுசரிப்பதென்று மத்திய பா.ஜ.க அரசு அறிவித்திருக்கிறதே?”
“இது பா.ஜ.க-வின் கையாலாகாத்தனத்தின், வன்மத்தின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும். கூடவே அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் வலியையும் காட்டுகிறது. ஒருமைப்பாட்டையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள். அவர்களுடைய உண்மையான முகமே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும் என்பதுதான். இதனால்தான் அவர்கள் சுதந்திரப் போராட்டத்திலேயே ஈடுபடவில்லை. ஆகவே, இவர்கள் இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருப்பது நகைச்சுவையாக இருக்கிறது. பா.ஜ.க-வினர் எமர்ஜென்சியைவிட மோசமான அரசியலைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.”
எமர்ஜென்சி காலத்தில்கூட மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் வேலையை நாங்கள் செய்யவில்லை. கலகத்தை மூட்டி, அதில் அரசியல் ஆதாயம் தேடும் கும்பல்தான் பா.ஜ.க-வினர். இவர்களின் அரசியல், மக்களை மக்கள்மீது திருப்பி அந்தச் சண்டையில் குளிர்காய்பவர்கள். ஒருகட்டத்துக்குப் பிறகு வன்முறையை நிறுத்த முடியாது. பக்கத்து வீட்டுக்காரன் எதிரியாகிவிட்டால், நீங்கள் என்ன செய்ய முடியும்… இந்த பயத்தை உருவாக்கித்தான் பல இடங்களில் ஓட்டு வாங்குகிறார்கள். அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே இந்த வன்மத்தைப் பரப்புகிறார்கள்.”
“ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து விசாரணை நடந்துவரும் சூழலில் ஆருத்ரா, பா.ஜ.க-வுக்குத் தொடர்பு இருப்பதாக செல்வப்பெருந்தகையும், நீங்களும் சொல்வது சரிதானா… அதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?”
“ஆருத்ரா மோசடியில் பா.ஜ.க-வைச் சேர்ந்த நிர்வாகிகள் பலருக்குத் தொடர்பு இருக்கிறது. பா.ஜ.க மிகவும் வேகமாக வளர்வதாகக் காட்டிக்கொள்ளும் பிம்பத்தை உருவாக்க கோடிகளைக் கொட்டுகிறார்கள். அதற்கான பணத்தை கட்டப்பஞ்சாயத்து செய்துதான் திரட்டுகிறார்கள். ஆகவேதான் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், ஆருத்ராவுக்கும் தொடர்பு இருக்கிறது எனப் பரவலாக அனைவரும் பேசுகிறார்கள். ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும் என்று ஒரு வார்த்தைதான் செல்வப்பெருந்தகை சொன்னார்.
அதற்கு அண்ணாமலை கோபத்தின் உச்சிக்குச் சென்றது மட்டுமல்லாமல், தனிமனிதத் தாக்குதலையும் தொடுத்தார். இவ்வளவு ஆக்ரோஷமாகச் செயல்படுவது எதற்காக… எனவே, ஆருத்ரா விவகாரத்தை முழுமையாக விசாரித்தால் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாகப் பல உண்மைகள் வெளிவரும். இதில் பா.ஜ.க நிர்வாகிகளுக்கு நிச்சயமாகத் தொடர்பு இருக்கிறது. இல்லையென்றால், அண்ணாமலை இவ்வளவு கோபப்பட வேண்டிய அவசியமில்லை. எப்படியாவது ஆருத்ரா தொடர்பு வெளியில் வந்துவிடுமோ என்கிற பயத்தில்தான் அவர்கள் இருக்கிறார்கள்.”
” ‘தமிழகத்தில் தலித் தலைவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை’ என்கிறாரே திருமாவளவன்?
“என்னைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் பல காலமாகவே தலித் சமுதாயத்துக்கும், தலைவர்களுக்கும் பெரிய அளவில் பாதுகாப்பு இல்லை. ஒடுக்கப்பட்ட சமுதாயம் மேலே வருவது சிலருக்குப் பிடிக்கவில்லை.”
“செல்வப்பெருந்தகையை அண்ணாமலை விமர்சனம் செய்தவுடன், அமித் ஷாவை நீங்கள் விமர்சனம் செய்தது தனிமனிதத் தாக்குதல் இல்லையா?”
“அண்ணாமலை பேசியதற்கு பதில்தான் கொடுத்தோம். திட்டமிட்டுக் கடத்தி, கொலைசெய்வது, பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எனப் பலவற்றில் தொடர்பிருக்கும் அரசியல்வாதி அமித் ஷாதான். ஆகவேதான் இதெல்லாம் என்ன என்று கேட்கிறோம்.”
“மணிப்பூர், வேலையில்லாத் திண்டாட்டம் என அனைத்துப் பிரச்னைகளுக்கும் ராகுல் காந்தி குரல் கொடுத்து வருகிறார். ஆனால், இஸ்லாமியர்கள் தாக்கப்படுவது குறித்து ராகுல் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவில்லை என்கிற வருத்தம் இஸ்லாமியர்கள் மத்தியில் நிலவிவருகிறதே?”
“இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. பா.ஜ.க-வின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராக நிற்பது ராகுல் காந்திதான். ஆகவே, அப்படிப்பட்ட தலைவரை இஸ்லாமியர்கள் பக்கம் இல்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. தினமும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கு எதிராகச் சண்டை செய்துகொண்டிருக்கிறார். இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், அவர்களுக்காகப் போராடுவது ராகுல் காந்தி மட்டும்தான். இந்தப் போராட்டத்தை மறைக்க வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் சிலர் பேசுகிறார்கள்.”
“தமிழ்நாட்டில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் தொடங்கி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கொலை வரை எதையுமே ராகுல் காந்தியோ, அகில இந்தியத் தலைமையோ கண்டிக்கவில்லையே?”
“தி.மு.க அரசாங்கத்தை நம்புவதால்தான் அவர்களுடன் நாங்கள் கூட்டணி வைத்திருக்கிறோம். முதல்வரின் செயல்பாட்டின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆகவேதான் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்; நீதி கிடைக்க வேண்டும் எனச் சொல்கிறோம். ஆகவே, எங்களது வலியுறுத்தல்களுக்கு உள்ளேயே கண்டிப்பும் இருக்கிறது.”
“தி.மு.க கூட்டணியில் இருக்கும் வி.சி.க போன்ற கட்சிகள் வரும் சட்டமன்றத் தேர்தலில் அணி மாறக்கூடும் என்று சொல்லப்படுகிறது. காங்கிரஸ் மட்டும் தி.மு.க-வின் சார்பு அணியாகவே செயல்படப்போகிறதா?’’
“வரும் காலம் குறித்து நாம் தற்போது கருத்து சொல்ல முடியாது. நாங்கள் சித்தாந்தரீதியாக ஒன்றாகப் பயணிக்கிறோம். பாசிசவாதிகளை புறம் தள்ளும் வரையில் ஜனநாயகத்தை விரும்பும் அனைவரும் ஒன்றாகப் பயணிப்போம்.”
“ `ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் மோடிக்கு எதிராக இப்போது காட்டும் வேகத்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே காட்டியிருந்தால், அகில இந்திய அளவில் அரசியலே மாறியிருக்கும். அவர்களது செயல்படாத தன்மைதான், மூன்றாம் முறையாக மோடி ஆட்சிக்கு வரக் காரணம்’ என்கிறார்களே?”
“மோடி என்பது ஒரு கருவிதான். பாசிசத்தை எதிர்த்து ஜனநாயகம் நிற்கிறது. மோடியைத் தோற்கடிக்க வேண்டும் என்பது குறுகிய பார்வை. ஜனநாயகத்தை மக்களுக்குப் புரியவைக்கும் இடத்தில் நாங்கள் தவறிவிட்டோம் என்று வேண்டுமானால் சொல்லலாம். அதேநேரத்தில், அவர்களைப் பெரும்பான்மையிலிருந்து வெளியில் கொண்டுவருவதற்கு நீண்ட போராட்டம் தேவைப்படும். ஜனநாயகத்தைக் கொண்டாடும் மக்களை உருவாக்கவும் குறிப்பிட்ட கால அளவு தேவைப்படும். அதற்காக தீவிரமாக முயன்றுவருகிறோம்.”
“கள்ளச்சாராயம், படுகொலை, என்கவுன்ட்டர் எனத் தமிழகம் அமைதிப் பூங்காவாக இல்லை. சட்டம்-ஒழுங்கு பிரச்னை தலைவிரித்து ஆடுகிறது என்கிற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“தமிழகத்தில் எந்தவிதமான கலவரமோ, அமைதி இல்லாமையோ இல்லை. ரெளடியிசத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.”
“ஆனால் ரௌடிகள் துரை, திருவேங்கடம் என அடுத்தடுத்து நடத்தப்பட்ட என்கவுன்ட்டர்களில் மர்மம் இருப்பதாகவும் விமர்சனம் கிளம்பியிருக்கிறதே?”
“அதில் என்ன நடந்தது என்று தெரியாமல் எந்தக் கருத்தும் சொல்ல முடியாது. அதேநேரத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்காத வகையில் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து.”
“நீங்கள் ஒரு ஐ.ஏ.எஸ் என்ற முறையில் கேட்கிறேன்… அரசியல் கலக்காமல், காவிரி பிரச்னைக்கு ஒரு தீர்வு சொல்லுங்களேன்?”
“இந்த விவகாரத்தில் அரசியல் கலக்காமல் இருக்க முடியாது. இது மக்களின் வாழ்வாதாரச் சம்பந்தப்ப விஷயம். எப்போதும் மேலே இருப்பவர்கள் அதிகம் தண்ணீர் பயன்படுத்துவார்கள். கீழே இருப்பவர்களுக்குக் குறைந்த தண்ணீர்தான் கிடைக்கும். இதையெல்லாம் தடுக்க வேண்டுமென்றால் சட்டரீதியாக நீதிமன்றம் சொல்வதை இரண்டு மாநிலங்களுக்கும் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.”
ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023 – Part 01 ஐ காண