கரூர், கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் கரூர் மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாவட்ட வாரியாக பயணம் மேற்கொண்டு வருகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இதனால், அறிவிக்கப்படாத அவசரகால சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள்மீது வழக்கு.. யார் எதிர் கருத்து கூறினாலும் அவர்கள்மீது தாக்குதல் என்று இப்படிப்பட்ட பாசிச ஆட்சிதான் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இப்பொழுது முழுமையான மோடி ஆட்சி என்றது போய்… கூட்டணி ஆட்சிதான் நடத்த வேண்டும் என மக்கள் நடந்து முடிந்த தேர்தலில் தீர்ப்பளித்துள்ளார்கள். எங்களுடைய தலைவர் ராகுல் காந்தி ஜி அவர்கள், தொடர்ந்து தன்னுடைய ஜனநாயக கடமையை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக ஆற்றி வருகிறார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்கள். அவர் மக்களின் குரலாக, மக்களின் முகமாக இந்த தேசத்தில் விளங்கிக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து, ஓர் அமைச்சர், ஒரு மூத்த தலைவர், யார் வாழ வேண்டும் யார் வாழக் கூடாது இந்த தேசத்தில் என்பதை பற்றி எல்லாம் செய்திகளை வெளியிடுகிறார். ஒரு வெறுப்பு அரசியலை தொடர்ந்து பா.ஜ.க அரசு செய்து வருவதைப் பார்த்தால், இன்னும் திருந்தியதுபோல தெரியவில்லை. இந்தியா முழுவதும் அப்படி என்றால் தமிழகத்தில் ஒரு புதிய அவதாரம் நான் (அண்ணாமலை) என்று சொல்கிறார், பயலாஜிக்கல் மேன். வெறுப்பு அரசியல் செய்து கொண்டு வருகிறார். அது நீதிபதியாக இருந்தாலும் சரி, மாணவர்களாக இருந்தாலும் சரி, இறந்துபோன தலைவராக இருந்தாலும் சரி, எல்லோரையும் காழ்ப்புணர்ச்சியோடு பேசி வருகிறார். இவற்றையெல்லாம் இந்த தமிழக மக்கள் பார்த்து வருகிறார்கள்.
படிப்படியாக மீண்டும் அவர்களுக்கு மிகப்பெரிய படிப்பினை அளிப்பார்கள். நாங்கள் தனிப்பெரும்பான்மையோடு இந்தியாவில் வெற்றி பெறுவோம் என பா.ஜ.க கூறி தேர்தலைச் சந்தித்த நிலையில், மக்கள் எவ்வாறு தீர்ப்பு அளித்துள்ளனர் என்பதை பார்க்க வேண்டும். ஒன்றிய பா.ஜ.க அரசு என்பது வலது பக்கம் சந்திரபாபு நாயுடு, இடது பக்கம் நிதிஷ் குமார் ஆகியோர் தயவுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியைப் பொறுத்தமட்டில் மகிழ்ச்சியாக தேர்தலைச் சந்தித்து மக்கள் பணியை ஆற்றிவருகிறோம். ஆனால், ஆளுங்கட்சி வருத்தத்தில் ஆட்சி அமைத்துள்ளது. சாலைகளில் ஆடுகளை பலியிடுவது குறித்து நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து கேட்கிறீர்கள். தமிழ் கலாசாரப்படி கோயில்களில் ஆடு பலியிடுவது என்பது இறைவனுக்கு வேண்டுதல் நிறைவேற்றும் பழக்கமாக உள்ளது.
தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கோயில்களில் ஆடு பலியிடுவதை தடுக்க தனி சட்டம் கொண்டு வந்தார். பின்னர், தமிழ் மக்களின் எதிர்ப்பால், அச்சட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார். நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து பின்னர் கருத்து தெரிவிப்பேன். பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைச் சம்பவ பின்னணியில் அரசியல் கட்சி நிர்வாகிகள் இருப்பதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்திருப்பது குறித்தும் கேட்கிறீர்கள். ஸ்காட்லாந்து போலீஸூக்கு நிகரான தமிழக போலீஸ் விசாரணையில் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை உள்ளது. இந்த வழக்கில் விசாரணை 10 நாள்கள் நிறைவுற்றுள்ள நிலையில், கருத்து கூற முடியவில்லை என்றாலும், காங்கிரஸ் கட்சியின் விருப்பம் உண்மையான குற்றவாளியை காவல்துறை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதுதான்” என்றார்.