நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனியின் விவசாய தோட்டத்தில் இருந்து, உழவு வாகனத்தை திருடிய வழக்கில் பெண் ஒருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திரைப்பட இயக்குநரான சமுத்திரக்கனி, தனது படங்கள் மூலம் சமூக முன்னேற்றத்திற்கான கருத்துகளை பேசுவதுடன், விவசாயத்தின் மகத்துவத்தையும் பறைசாற்றி வருகிறார். விவசாயமும், விவசாயிகளும் சுரண்டலுக்கு ஆளாவது குறித்து “வெள்ளை யானை” என்ற திரைப்படத்தில் தானே நடித்து விழுப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்… ஆனால், எதார்த்தத்தில் அவரின் விவசாய நிலத்திலேயே உழவுப் பொருள் திருட்டு போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது… நடந்தது என்ன?
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஊர் கவுண்டனூர் கிராமத்தில் சமுத்திரக்கனிக்கு சொந்தமாக, விவசாய நிலம் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த 32 வயதான ராமு என்பவர் விளைநிலத்தை பராமரித்து வருகிறார். அங்கு, உழவுப் பணி மேற்கொள்வதற்காக ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பவர் டில்லர் இயந்திரத்தை நடிகர் சமுத்திரக்கனி வாங்கி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் பவர் டில்லர் இயந்திரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து விவசாய நிலத்தை பராமரித்து வரும் ராமு, செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பெயரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், திருவண்ணாமலை அருகே ஒரு பெண் உட்பட 4 பேரை கைது செய்தனர்.
அவர்களை, செங்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருவண்ணாமலை அடுத்த மேல் பாலானந்தல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தான், உழவு இயந்திரத்தை திருடுவதற்கு மூளையாக இருந்தது தெரியவந்தது.
இவர் ஏற்கனவே சமுத்திரக்கனியின் விவசாய நிலத்தில், வேலை செய்தவர் என்பதும் அம்பலமானது. இருவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மெய்யூர் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார், ஊர் கவுண்டனூரை சேர்ந்த அருண்குமார், கல்லாத்தூரை சேர்ந்த விஜயா என்பதும் தெரியவந்தது.
இதையும் படிங்க:
உலகே வியக்கும் வகையில் நடைபெற்ற அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழா!
பின்னர், பவர் டில்லர் இயந்திரத்தை பறிமுதல் செய்த போலீசார், 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதில், முக்கிய குற்றவாளியான மணிகண்டன் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது…
.