கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் அமைந்துள்ள கல்குளம், விளவங்கோடு தாலுகா வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உறுப்பினராக இணைந்தால், ஒரு லட்சம் ரூபாய் லோன் தருவதாக ஏமாற்றி, 3,421 பேரிடம் 3,76,310 ரூபாய் வசூலித்து, அந்தப் பணத்தை அதிகாரிகள் சுருட்டிக்கொண்டதாக எழுந்துள்ள புகார், பரபரப்பை கிளப்பியுள்ளது. இது குறித்து பணம் செலுத்தியவர்களில் ஒருவரான கணேசன் என்பவர் நம்மிடம் கூறுகையில், “கல்குளம், விளவங்கோடு தாலுகா வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.220 செலுத்தி உறுப்பினராக இணைந்தால், ஒரு லட்சம் ரூபாய் லோன் தருவதாக சங்க செயலர் ராஜகுமார் கூறினார். அதனால், எங்கள் ஊரில் இருந்து நிறைய பேர் உறுப்பினராகச் சேர்ந்தார்கள். நான் கடந்த ஜூன் மாதம் 220 ரூபாய் செலுத்தினேன். 110 ரூபாய் வீதம் 2 ரசீதுகள் கொடுத்தார்கள். அதன் பிறகு லோன் தராமல் ஏமாற்றிவிட்டார்கள். இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என ஆலோசித்து வருகிறேன்” என ரசீதுகளை நம்மிடம் காண்பித்தார்.
இது பற்றி கல்குளம், விளவங்கோடு தாலுகா வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க முன்னாள் தலைவர் நாஞ்சில் டொமினிக் கூறுகையில், “இந்தச் சங்கத்தின் கீழ் சுமார் 66 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. சங்கத்தில் 5 ரூபாய் செலுத்தி பி கிளாஸ் உறுப்பினராகச் சேர்ந்தால், குறைந்த வட்டியில் விவசாய நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு விவசாய நகைக்கடன் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. மற்றபடி லோன் கொடுப்பது இல்லை. 10.06.2024 நாள்படி 849 பி கிளாஸ் உறுப்பினர்கள்தான் உள்ளனர். இவர்கள் ஏ கிளாஸ் மெம்பர் ஆகவேண்டுமானால் ஒரு பங்குக்கான தொகை 100 மற்றும் நுழைவு கட்டணமாக 10 ரூபாய் என 110 ரூபாய் சங்கத்துக்கு செலுத்த வேண்டும். ஏ கிளாஸ் மெம்பர்கள் மட்டுமே சங்க தேர்தலில் வாக்களிக்க முடியும். சங்க செயலாளர் ராஜகுமார் 06.03.2024 முதல் 20.06.2024 தேதிக்குள் 3,421 விண்ணப்பதாரர்களை பி வகுப்பு உறுப்பினர்களாக சேர்த்துள்ளார். அவர்களிடம் உறுப்பினர் கட்டணமாக 5 ரூபாய் வசூல் செய்ததாக சங்கத்தின் எந்த கணக்கிலும் காட்டவில்லை. அதே 3,421 உறுப்பினர்களை ஏ கிளாஸ் உறுப்பினர்களாக சேர்க்க 110 ரூபாய்க்கு பதில் 220 ரூபாய் வாங்கியுள்ளார். குறுகிய காலத்தில் அதிப்படியான உறுப்பினர்களை சேர்க்க முயல்வதற்கு இனி வர உள்ள கூட்டுறவு சங்க தேர்தல்தான் காரணம். அதன் பின்னணியில் ஆளுங்கட்சியினர் இருப்பதாகவும் சந்தேகிக்கிறோம்.