அமைச்சர் சென்றவுடன் அங்கு வந்த ஒன்றியக் குழுத் தலைவர் திவ்யா பிரபு, செய்தியாளர்களிடம் பேசும்போது, “நான் அ.தி.மு.க என்பதால் இந்த யூனியனுக்கு அரசு நிதி எதுவும் ஒதுக்காமல் புறக்கணிக்கிறது, அதை வலியுறுத்தி போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும்போது, அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் இந்த விழாவை நடத்துகிறார்கள். என்னை ராஜினாமா செய்யச் சொல்லி அமைச்சர் பேசுகிறார். அவரா என்னை தலைவராக்கினார்… அவருக்கு என்ன உரிமை உள்ளது? இரண்டு முறை அமைச்சராகவும் மூன்று முறை எம்.எல்.ஏ-வாகவும் இருந்த அவர், எந்த ஒரு திட்டத்தையும் இங்கு கொண்டு வந்ததில்லை. அப்படிப்பட்டவர் என்னை ராஜினாமா செய்யச் சொல்கிறார்.
மக்கள் வாக்களித்து இப்பதவிக்கு நான் வந்தேன். மக்கள் சொன்னால் ராஜினாமா செய்கிறேன். சிங்கம்புணரி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு செலவு செய்ததாக பில்லில் கையெழுத்து மட்டும்தான் வாங்குகிறார்கள், அந்த நிதியெல்லாம் எங்கே போச்சு என்று தெரியவில்லை. ஆட்சி மாறும்போது காட்சியும் மாறும்” என்றார்.
அமைச்சரும், ஒன்றியக் குழுத் தலைவரும் மாறி மாறி குற்றம்சாட்டி பேசி வருவது, சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.