மருத்துவ உலகில் தமிழகம் இந்தியாவில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. இதனால் பிற மாநிலங்களிலிருந்தும் அண்டை நாடுகளிலிருந்தும் நோயாளிகள் தமிழகத்திற்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர். வழக்கமாக சென்னையில் உள்ள மருத்துவமனைகள் அறுவை சிகிச்சையில் பல சாதனைகளை நிகழ்த்தும் நிலையில் தற்போது அந்த வரிசையில் கோவையும் இணைந்துள்ளது.
சிக்கலான ஒரு இருதய அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தது தான் அதற்கு காரணமாக அமைந்துள்ளது. நம் அனைவரின் உடலும் உயிர்ப்புடன் இயங்குவதற்கு இன்றியமையாத பங்காற்றுவது இதயம். அதுவே 2 இதயம் இருந்தால் எப்படி இருக்கும் என சிந்தித்து பார்த்துள்ளீர்களா. என்ன 2 இதயத்துடன் யாராவது இருப்பார்களா என நீங்கள் சிந்திக்கலாம், கோவையில் மருத்துவர்களால் சிகிச்சையளிக்கப்பட்ட நபர் ஒருவர் 2 இதயங்களுடன் வாழ்ந்து வருகிறார்.
கோவையில் KMCH மருத்துவமனையில் நடந்த இந்த இதய அறுவை சிகிச்சையில் இரண்டு இதயங்களை ஒரே நேரத்தில் துடிக்க வைத்து அசத்தியவர் கோவையைச் சேர்ந்த டாக்டர் பிரசாந்த் வஜ்யநாத். இவர் இந்த அற்புதத்தைச் செய்து அந்த நபரின் உயிரைக் காப்பாற்றியது அவருக்கும், அவர் குடும்பத்திற்கும் பேரின்பத்தை உண்டாக்கியது. இந்த சம்பவத்தால் மருத்துவரின் கண்களில் யாராலும் முடியாத ஒன்றைச் சாதித்த ஒரு ஆனந்தமும், பெருமையும் தெரிகின்றது.
இது குறித்து டாக்டர் பிரசாந்த் விஜயநாத் கூறுகையில், “நான் KMCH மருத்துவமனையில் கார்டியோ பிளாஸ்டிக் சர்ஜரியின் இயக்குநராகவும் தலைவராகவும் இருக்கிறேன். ஓராண்டாக இருதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்த 48 வயதான நோயாளி எங்கள் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வந்தார். பலமுறை மாரடைப்பு ஏற்பட்ட அவருக்கு ஸ்டெண்டும் வைக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் அவரது இருதயத்தின் செயல்பாடு குறைவாக இருந்த காரணத்தினால் அன்றாடப் பணிகளைக் கூட அவரால் மேற்கொள்ள முடியாமல் இருந்தது. இதனால் இதய, நுரையீரல் மாற்றுச் சிகிச்சைக்காக விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு உடல் உறுப்பு மாற்று ஆணையத்தின் மூலம் இதயம் மட்டும் கிடைத்தது.
இதனால் நோயாளியின் இதயம் மற்றும் கொடையாளரின் இதயம் என இரண்டையும் இணைத்து நுரையீரலின் அழுத்தத்தையும் சேர்த்து ஈடு செய்ய முடியும் என கண்டறிந்து ஹெட்டோரோடோபிக் சிகிச்சை செய்யத் தீர்மானித்தோம். மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையின் முடிவில் அவருக்கு இதயம் வெற்றிகரமாகப் பொருத்தி கருவி உதவியுடன் 2 இதயங்களையும் சீராகத் துடிக்க வைத்தோம்.
தற்போது அந்த நோயாளி நலமாக மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பும் 2017ஆம் ஆண்டும் இதுபோன்ற ஒரு சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தோம். முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இந்த சிகிச்சைக்கு நோயாளி பயனடையும் வகையில் ரூ.15 லட்சம் வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.