தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறாமல் படுதோல்வியைச் சந்தித்தது. அதோடு, ஏழு இடங்களில் அ.தி.மு.க டெபாசிட் இழந்தது. இதனால், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்தும், 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்தும் தொகுதிவாரியாக கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடத்திவருகிறார்.
அந்த வரிசையில், இதுவரை தொகுதி வாரியாக நடந்த அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டங்களில், மிக நீண்ட நேரத்துக்கு ஆலோசனை நடைபெற்றது, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்காக நடைபெற்ற இன்றைய கூட்டம் தானாம். இந்தத் தொகுதியில்தான், ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக களமிறங்கி, புதிய சின்னத்தில் போட்டியிட்டும் மூன்று லட்சத்து நாற்பதாயிரம் வாக்குகள் பெற்று அ.தி.மு.க வேட்பாளரை மூன்றாம் இடத்துக்குத் தள்ளி இரண்டாம் இடம் பிடித்தார் என்பது கவனிக்கத்தக்கது.
இவ்வாறிருக்க, எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் மூன்று மணி நேரத்துக்குமேல் நீடித்தது என்கிறார் ர.ர-க்கள். இதில், ராமநாதபுரத்தில் அ.தி.மு.க எப்படி டெபாசிட் இழந்தது… 1 லட்சத்தை கூட தாண்டாத அதிமுக வாக்குகள்… தனிச் சின்னத்தில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் எப்படி மூன்று லட்சத்துக்கு மேல் வாக்குகள் பெற்று இரண்டாம் பிடித்தார்… கட்சி நிர்வாகிகளின் செயல்பாடு போன்ற விஷயங்கள் பெரும் விவாதமாக அமைந்ததாக சொல்லப்படுகிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய தலைமை கழக நிர்வாகிகள் சிலர், “இன்றைய கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டது. குறிப்பாக, முக்குலத்தோர் சமூக வாக்குகள் இல்லாமல் தென் மாவட்டங்களில் தேர்தல் வெற்றி என்பது கடினம் என்று அ.தி.மு.க நிர்வாகிகள் பேச தொடங்கினர். ஒருகட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து நாம் பரிசீலிக்க வேண்டும் என ஓப்பனாகவே வலியுறுத்தி இருக்கிறார்களாம். ஒற்றைத் தலைமை விவகாரம் தொடங்கியது முதல் நாடாளுமன்ற தேர்தல் வரையில் எடப்பாடி முன்னிலையில், ஓ.பி.எஸ், சசிகலா ஆதரவு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதில்லை. ஆனால், தொடர் தோல்விகள், அதிமுக நிர்வாகிகளை இப்படி பேச வைத்திருக்கலாம்.
ராமநாதபுரம் தொகுதி குறித்த விவாதத்தில் இந்த கருத்துகள் வரும் என்பதை எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்தது தான். நிர்வாகிகளுக்கு பதிலளித்து பேசுகையில் எடப்பாடி, `அ.தி.மு.க வாக்குகள் எங்கு சிதறின என்பதைக் கண்டறிந்து அடுத்து வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்குள் கட்சியை அடிமட்ட அளவில் இன்னும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்’ என்றவர், கட்சியைச் சீரழிக்கும் எண்ணம் கொண்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சியில் என்றும் இடமில்லை, சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து பிறகு பேசிக்கொள்ளலாம்’ என முடித்துக்கொண்டார்.
எப்போது சசிகலா, ஓ.பிஎஸ், தினகரன் குறித்த பேச்சுகள் எடுத்தாலும், தீர்க்கமாக நோ சொல்லும் எடப்பாடி, சசிகலா இணைப்பு குறித்த ராமநாதபுர தொகுதி நிர்வாகிகளின் தொடர் அழுத்ததுக்கு உடனடியாக `நோ’ சொல்லாமல், பிறகு பேசிக்கொள்ளலாம் என முடித்திருப்பதாக வெளியாகும் தகவல் அதிமுக வட்டாரத்தில் புதிய அனலை கிளப்பி இருக்கிறது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88