மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வெளியிடுகிறார்.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவையொட்டி, அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது. இந்த நாணயத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை ஏழு மணியளவில் நடைபெற உள்ளது.
விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு கருணாநிதியின் நுாற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். முன்னதாக மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்த உள்ளார். கருணாநிதி நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதையும் படிக்க:
வசூலில் தங்கலானை ஓரம் கட்டிய படம்… முதல் நாளே இத்தனை கோடி வசூலா?
அதோடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவையொட்டி, சென்னையில் இன்று முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்
நாணய வெளியீட்டு விழா நடைபெற இருப்பதால், வாலாஜா சாலை, காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, போர் நினைவுச் சின்னம், கொடிப் பணியாளர் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வணிக வாகனங்கள் அனுமதிக்கப்படாது என மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், காமராஜர் சாலை மற்றும் வாலாஜா சாலையில் வாகனங்களை நிறுத்த பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், கலைவாணர் அரங்கம், கலைஞர் நினைவிடம், வாலாஜா சாலை மற்றும் அதைச்சுற்றியுள்ள இடங்களில் இன்று போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால், வாகன ஓட்டிகள் மாற்று வழிகளைத் தேர்வு செய்யுமாறு சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
.