கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா; மத்திய அமைச்சர் கலந்துகொள்கிறார்!
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை, திமுக அரசு விமர்சையாகக் கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாகக் கருணாநிதியின் நினைவாக 100 ரூபாய் நாணயம் வெளியிடத் தமிழ்நாடு அரசு, மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தது. அதற்கு மத்திய அரசும் அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயத்தை வெளியிடுவதற்கான வேலைகளில் தமிழ்நாடு அரசு மும்முரமாக இறங்கியது. அதன்படி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் 18-08-2024 (இன்று) `கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழா” நடைபெறும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
இன்று மாலை 6:50 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நாணயத்தை வெளியிடுகிறார், அதைத் தொடர்ந்து உரையாற்றவும் இருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அரசு விழாவுக்குத் தலைமை தாங்குகிறார்.
இந்த விழாவில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், சென்னை மாநகர மேயர் மற்றும் துணை மேயர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.