“கலைஞருக்கு ராஜ்நாத் சிங் மரியாதை… இரவு முழுவதும் மகிழ்ச்சியில் தூக்கமே வரவில்லை!” – ஸ்டாலின்

நேற்று கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. இந்த நிகழ்வில் ஆளும் பா.ஜ.க அரசின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, `விழாவுக்கு ராகுல் காந்தி வராதது ஏன்? நாணயத்தில் தமிழில் எழுதப்படவில்லை’ எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், இன்று திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி சங்கர் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.

நாணயத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்!

அப்போது, “கடந்த ஒர் ஆண்டாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடி வருகிறோம். இதுபோன்ற ஒரு கொண்டாட்டம் வேறு எந்தத் தலைவருக்கும் நடந்ததில்லை. கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், மதுரை நூலகம் உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள திட்டங்களை கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு நிறைவேற்றியிருக்கிறோம். இதெற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போலதான் நேற்று நடந்த கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழா.

ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘கலைஞர் நினைவிடத்தை பார்த்தே ஆகவேண்டும்’ என அவரே கேட்டு, முழுமையாக அத்தனையையும் பார்வையிட்டார். அதன்பிறகு, `இதுபோல நான் எங்கேயும் பார்த்ததே இல்லை’ எனப் பாராட்டினார். அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், எங்களுக்கே ஆச்சர்யமளிக்கும் விதமாக, ‘நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரும் எழுந்து கலைஞருக்கு மரியாதை செய்யுங்கள்’ எனக் கூறினார். நேற்று இரவு முழுவதும் எனக்கு மகிழ்ச்சியில் தூக்கமே வரவில்லை.

ஸ்டாலின் – ராஜ்நாத் சிங்

மேலும், அவரின் உரையில், கூட்டணிக் கட்சிக்காரர்கள் எப்படி பேசுவார்களோ அதைவிட அதிகமாக, தி.மு.க-காரர்களை விட அதிகமாக கலைஞரை புகழ்ந்து, சிறப்புப்படுத்தி பேசினார். கலைஞரை இந்தளவுக்கு புகழவேண்டும் என்ற எந்த தேவையும் அவருக்கு இல்லை. ஆனாலும் அவர், உள்ளதை உள்ளபடி உள்ளத்திலிருந்து பேசினார். இதை சிலரால் தாங்கிகொள்ள முடியவில்லை.

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் நேற்று அளித்தப் பேட்டியில், `தமிழ்… தமிழ் எனப் பேசுகிறவர்கள் வெளியிடும் நாணயத்தில் தமிழ் இல்லை’ எனத் தெரிவித்திருக்கிறார். அரசியல் அறிவு, அல்லது நடைமுறை அறிவு என எதாவது ஒன்றாவது இருக்க வேண்டும். அவருக்கு எதுவும் இல்லை. இந்த நிகழ்ச்சி மத்திய அரசின் அனுமதியோடு நடந்த நிகழ்ச்சி. அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற பல தலைவர்களுக்கு நாணயம் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த நாணயத்தையெல்லாம் அவர் பார்த்திருக்க மாட்டார் என நினைக்கிறேன்.

கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா

எல்லா நாணயத்திலும் ஆங்கிலத்திலும் இந்தியிலும்தான் எழுதப்பட்டிருக்கும். அண்ணாவிற்கான நாணயத்தில் கலைஞர் முயற்சியால், ‘அண்ணாவின் கையெழுத்து இடம்பெற வேண்டும்’ எனக் கேட்டு அவரின் கையெழுத்துடன் நாணயம் வெளியிடப்பட்டது. அதுபோல கலைஞரின் நாணயத்தில் ‘தமிழ் வெல்லும்’ எனத் தமிழில்தான் எழுதப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு ராகுல் காந்தியை ஏன் அழைக்கவில்லை எனக் கேட்கிறார்… இது ஒன்றிய அரசு நடத்திய நிகழ்ச்சி. அந்த அடிப்படையில்தான் அந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் எங்கே பழனிசாமிக்கு வலிக்கிறது.

எம்.ஜி.ஆர்-க்கு நாணயம் வெளியிட்டபோது ஒன்றிய அரசிலிருந்து யாரும் வந்து கலந்துகொள்ளவில்லை. பழனிசாமியே நாணயத்தை வெளியிட்டார். அவரை முதல்வராகவோ, மனிதனாகவோகூட ஒன்றிய அரசு நினைக்கவில்லை. நாம் அழைத்தவுடன் ‘எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வந்து இருந்து நிகழ்ச்சியை முடித்து செல்கிறேன்’ என வந்திருந்தவர்தான் ஒன்றிய அரசின் அமைச்சர் ராஜ்நாத் சிங். இதுதான் ஒன்றிய அரசுக்கு தி.மு.க மீது இருக்கும் மரியாதை. கலைஞருக்கு இருக்கும் சிறப்பு.

எடப்பாடி பழனிசாமி

அம்மா… அம்மா எனப் புகழ்பாடுபவர்கள் இதுவரை அந்த அம்மையாருக்காக ஒரு இரங்கல் கூட்டமாவது நடத்தியிருப்பார்களா… இதற்குகூட யோக்கியதையற்றவர்களுக்கு கலைஞருக்கான விழாவை விமர்சனம் செய்ய என்ன தகுதி இருக்கிறது. மத்திய அமைச்சரை அழைத்ததால், பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருக்கிறோம் எனப் பரப்புகிறார்கள்.

ரகசிய உறவு வைத்திருக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இந்திரா காந்தி, ‘கலைஞர், தி.மு.க-வை பொருத்தவரை எதிர்த்தாலும், ஆதரித்தாலும் கொள்கையுடன்தான் அவர்களின் எதிர்ப்பும் ஆதரவும் இருக்கும்’ எனக் கூறியிருக்கிறார். பழனிசாமி போல ஊர்ந்துபோய், பதுங்கிப்போய் பழிவாங்கும் புத்தி தி.மு.க-வுக்கு கிடையாது. உறுதியாக, நிச்சயமாக, அண்ணாமீது ஆணையாக கூறுகிறேன்… நமக்கான உரிமையை எப்போதும் விட்டுகொடுக்க மாட்டோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *