`அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் கல்வராயன் மலைப்பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலினோ, அமைச்சர் உதயநிதியோ நேரில் சென்று பார்வையிட்டால் அப்பகுதி மக்களுக்கு ஏதாவது நன்மை ஏற்படும்” என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதையொட்டிய விசாரணையில், பல தசாப்பதங்களாகவே கல்வராயன் மலைப்பகுதிதான் சட்டவிரோத கள்ளச்சாராய காய்ச்சுவதற்கும், விற்பனை செய்வதற்குமான முக்கியப் புகலிடமாக இருப்பது என்பது மீண்டும் உறுதியானது. இதையடுத்து, கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராய புழக்கத்தை தடுத்த நிறுத்தவேண்டும் என்றால், அந்தப் பகுதியை மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத் தலமாக மாற்றவேண்டும், அப்பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் வகையில் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை சமூக ஆர்வலர்கள் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் வரை எழுப்பினர்.


அதேபோல சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி என்பவர் `கல்வராயன் மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கின்றனர். அவர்களின் கிராமங்களுக்கு மருத்துவமனை, சாலை வசதிகள் என எந்த அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லை’ என சமூக ஊடகங்களுக்கு பேட்டியளித்துவந்தார். அந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை மேற்கொண்டது. அப்போது நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, “மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி, கல்வராயன் மலைப்பகுதியை ஒட்டிய கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். கல்வராயன் மலைப்பகுதியச் சேர்ந்த பல குக்கிராமங்கள் 1976-ம் ஆண்டில்தான் இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. அதுவரையில் அந்த மக்களுக்கு அரசின் எந்தவொரு சலுகையும் கிடைக்கவில்லை. பின்னர் 1996-ம் ஆண்டில்தான் அவர்கள் தங்களின் வாக்குரிமையையே பதிவு செய்திருக்கின்றனர். இந்த செய்திகளெல்லாம் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.