தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநில பள்ளி கல்விக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதாகவும், அதேசமயம் மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்கு ஒப்புக்கொண்ட தமிழக அரசு மும்மொழி கொள்கை காரணமாக அதற்கு கையெழுத்திடவில்லை எனக் கூறியிருந்தார். மேலும், முதல்வரின் குடும்பம் நடத்தக்கூடிய பள்ளியில் மும்மொழி இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், `சமக்ரா சிக்ஷா” திட்டத்தின்கீழ் பள்ளி கல்விக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க தேசிய கல்விக் கொள்கை நிபந்தனையாக வைக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டி, நிதியை உடனடியாக ஒதுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.
அந்தக் கடிதத்தில், “தமிழ்நாடு மற்றும் சில மாநிலங்களில், சமக்ரா சிக்ஷா ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் வழங்கப்பட வேண்டிய முதல் தவணை நிதி விடுவிக்கப்படவில்லை. நாட்டின் கல்வித் துறையில், ஒன்றிய அரசின் நிதியுதவியோடு செயல்படுத்தப்படும் முதன்மையான திட்டம் இது என்பதால், முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திட்டத்தின்கீழ் உரிய நேரத்தில் நிதியை விடுவிப்பது மிகவும் அவசியம்.