கழுகார்: `எதிர்க்கவேண்டியது அதிமுக-வை அல்ல..!’ முதல் `சசிகலாவுக்கு எதிராகச் சீறிய திவாகரன்’ வரை

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க போட்டியிடாததால், “நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வாங்கிய 65 ஆயிரம் வாக்குகளையும் தி.மு.க பக்கம் திருப்ப வேண்டும்” என உத்தரவிட்டிருக்கிறது தி.மு.க. ஆனால், அந்தப் புரிதலின்றி களமாடுகிறாராம் விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் கௌதம் சிகாமணி. “எங்கே `11 தோல்வி எடப்பாடி’ என்ற பெயராகிவிடுமோ என்ற பயத்திலேயே இந்த இடைத்தேர்தலை அ.தி.மு.க புறக்கணித்திருக்கிறது” என்பது தொடங்கி தொடர்ந்து அ.தி.மு.க-வுக்கு எதிராகவே பிரசாரம் செய்துவருகிறாராம் அவர். ‘இப்படி அ.தி.மு.க-வுக்கு எதிராகப் பேசினால் அவர்களின் வாக்குகள் நமக்கு எப்படிக் கிடைக்கும்?’ எனத் தலைமைக்கு விக்கிரவாண்டியிலிருந்து புகார் பறந்திருக்கிறது.

கௌதம சிகாமணி

இதையடுத்து கௌதம் சிகாமணியைக் கண்டித்த தலைமை, பிரசாரத்தை பா.ம.க-வுக்கு எதிரானதாக மாற்றச் சொல்லி அவருக்கும், விக்கிரவாண்டி தேர்தல் பொறுப்பாளரான ஜெகத்ரட்சகனுக்கும் உத்தரவிட்டிருக்கிறது. இதையடுத்து, வன்னியர்கள் அதிகமிருக்கும் பகுதிகளில் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்துவதோடு, வன்னியர்களுக்கு தி.மு.க செய்த நலத்திட்டங்கள், பா.ம.க செய்த துரோகங்கள் குறித்தும் அதிகமாகப் பேசிவருகிறார்களாம் அவர்கள்.

தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், சிறுபான்மையினர் நலவாரியம் உள்ளிட்ட சில வாரியங்களுக்கான உறுப்பினர்களை நியமித்தனர். அப்படி நியமிக்கப்பட்டவர்களின் மூன்று ஆண்டு பதவிக்காலம் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனாலும், அரசு யாருக்கும் இன்னும் பதவி நீட்டிப்பு செய்யவில்லை. எனவே, அந்தப் பதவிகளைப் பிடிக்க, கூட்டணிக் கட்சி தொடங்கி ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் வரை பலரும் ஆளும் தரப்பை முட்டி மோதுகிறார்களாம். அதுமட்டுமல்ல, சட்டமன்றக் கணக்குக்குழுத் தலைவரின் மூன்றாண்டுக்கால பதவிக்காலமும் நிறைவுக்கு வந்திருப்பதால், அதற்கும் புதியவர்களை நியமிக்க ஆளும் தரப்பு முடிவு செய்திருக்கிறதாம். சுழற்சி முறையிலான அந்தப் பதவியை, “வேறு கட்சிக்குக் கொடுக்காமல், மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே கொடுக்க வேண்டும்” என அறிவாலயத்தை வலம்வந்துகொண்டிருக்கிறாராம் இப்போது அந்தப் பொறுப்பிலிருக்கும் செல்வப்பெருந்தகை. “சட்டமன்றக் கூட்டம் முடிவுக்கு வந்ததும், இந்த நியமனங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும். அதுவரை பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது” என்கிறது கோட்டை வட்டாரம்.

சமீபத்தில் சசிகலா அளித்த பேட்டியைவிட அதற்கு அவருடைய ஆதரவாளர் வெண்மதி கொடுத்த முகபாவனைதான் வைரலானது. இதில் கடுப்பான திவாகரனின் ஆதரவாளர் ஒருவர், வெண்மதியைப் போனில் அழைத்து, “உன்னால் சின்னம்மா கொடுத்த பேட்டியே காமெடியாகவிட்டது. இனி அவர் இருக்கும் பக்கமே நீ தலைகாட்டக் கூடாது” என மிரட்டியதோடு, ஏக வசனத்தில் திட்டித் தீர்த்துவிட்டாராம். “உங்களோடு நான் இருக்கிறது சிலருக்குப் பிடிக்கலை சின்னம்மா” என்று இந்த விவகாரத்தை சசிகலாவிடம் கொட்டியிருக்கிறார் வெண்மதி.

உடனடியாக திவாகரனை போனில் அழைத்த சசிகலா, அந்த தேனி புள்ளியைக் கண்டிக்கச் சொல்லி உத்தரவிட்டாராம். ஆனால், அவரோ, “நாங்க சொல்லுற எதையும் நீங்க கேட்க மாட்டீங்க. ஆனால், நீங்க சொல்லுறதை மட்டும் நாங்க கேட்கணுமா?” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாராம்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் தருமபுரியை காலிசெய்துவிட்டுக் கிளம்பிய சௌமியா அன்புமணி, சமீபத்தில் தருமபுரிக்கு வந்து வார்டுவாரியாகப் பொறுப்பாளர்களை அழைத்து, தேர்தல் தோல்விக்கான காரணத்தை விசாரித்திருக்கிறார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் நிர்வாகிகள் முதலில் பேசத் தயங்க, ‘சும்மா வெளிப்படையாகப் பேசுங்கள்’ என்று அவர்களின் தயக்கத்தைப் போக்கியிருக்கிறார் செளமியா. “மக்களுக்கும் நமக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது. அதைவிடப் பெரிய இடைவெளி எங்களுக்கும் தலைமைக்கும் இருக்கிறது. தேர்தல் நேரத்தில்தான் நாங்கள் தலைமையைச் சந்திக்க முடிகிறது.

இதையெல்லாம் மாற்றிக்கொள்வதுடன், இந்தப் பகுதியில் கட்சி மற்றும் மக்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்தாவிட்டால் இன்னும் மோசமான இடத்துக்குத் தள்ளப்படுவோம்” எனக் கொஞ்சம் காட்டமாகவே பேசியிருக்கிறார்கள் நிர்வாகிகள். எல்லாவற்றையும் குறித்துக்கொண்ட சௌமியா அன்புமணி, “எல்லாவற்றையும் மேலே சொல்கிறேன்” என்று உறுதியளித்துவிட்டு விடைபெற்றாராம்.

சென்னையின் பிரதான காய்கறி அங்காடிப் பகுதியில் பணியாற்றும் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர், தனக்குக் கீழ் பணியாற்றுபவர்களை அநாகரிகமாகப் பேசுவது, ஃபைலைத் தூக்கி எறிவது என மரியாதைக் குறைவாக நடத்துகிறாராம். “இது குறித்து கமிஷனர் அலுவலகத்தில் பலமுறை புகாரளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சில புகார்களைச் சம்பந்தப்பட்ட அதிகாரியின் டேபிளுக்கே ஃபார்வேர்டு செய்துவிடுகிறார்கள்” என்று புலம்புகிறார்கள் அவரின் சரகத்தில் பணியாற்றும் கீழ்நிலை அதிகாரிகள். “கமிஷனர் அலுவலக மூலவருக்கு வேண்டப்பட்டவர் என்பதால்தான் அவரது ஆட்டத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். இதற்கு மேலும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், கோட்டைக்குச் சென்றுதான் முறையிட வேண்டும்” என்ற முடிவெடுத்திருக்கிறார்களாம் அவர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *