2024 ஆம் ஆண்டின் சிறந்த பாடல் ஆசிரியருக்கான நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் மகுடம் விருது கவிஞர் யுகபாரதிக்கு வழங்கப்பட்டது.
கலை, இலக்கியம், சினிமா, விளையாட்டு, சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்தியவர்களை கவுரவிக்கும் வகையில் நியூஸ் 18 தமிழ்நாடு ‘மகுடம்’ விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்தவர்களை உச்சி முகரும் வகையில் இந்த ‘மகுடம்’விருது சூட்டப்படுகிறது. பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தவர்களை அலசி ஆராய்ந்து, துறைசார் வல்லுநர்கள் குழு மூலம் தேர்வு செய்து, கடந்த 2017 முதல் நியூஸ் 18 தமிழ்நாடு மகுடம் சூட்டி வருகிறது.
இந்நிலையில் 2024ம் ஆண்டுக்கான மகுடம் விருது விழா சென்னையில் கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த விழாவில் அரசியல் ஆளுமைகள், நீதியரசர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த விழாவில் 2024 ஆம் ஆண்டின் சிறந்த பாடல் ஆசிரியருக்கான நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் மகுடம் விருது கவிஞர் யுகபாரதிக்கு வழங்கப்பட்டது.
கவிஞர் யுகபாரதி
90களில் பேனா பிடித்து கவிஞர் யுகபாரதி புதுயுகத்தின் பாரதியாகத் தன்னை வரித்துக் கொண்டார். செந்தமிழர் வாழ்வியலை தம்முள் அடைத்துக் கொண்டு, கவிஞராக தொடங்கிய பயணம் பாடலாசிரியராக பரிணமித்தது.
சங்கத் தமிழையும் சந்தத்தில் அடக்கி சந்தைப்படுத்தினார் யுகபாரதி. இமான் முதல் இளையராஜா வரையிலான விற்பன்னர்களின் இசை கோர்வைக்கு இவரது கற்பனை கரம் கோர்த்தது.
மாமன்னன் முதல் மாடர்ன் லவ் வரை, வாலிபத்திற்கும் வயோதிகத்திற்கும் இடையிலான வாழ்க்கைக்கு இவரது வார்த்தைகள் உரம் சேர்த்தது. ஜனங்களின் கணங்களை இலக்கணமாக்கி இவர் வடித்த பாடல்கள் மனங்களை நிறைத்தது.
பஞ்சாரத்திற்குள் அடைபட்டுக் கிடந்த பைந்தமிழ் சொற்கள் பாரெங்கும் ஒலித்தது. கதைக்குப் பாட்டு எழுதும் கவிஞர்களின் காலத்தில் எழுதிய பாட்டுக்கெல்லாம் ஒரு கதை சொல்லும் இளைய கண்ணதாசனாகவும், பாடல்களில் மரபும் நவீனமும் குழைத்து கொடுக்கும் மானிட நேசனாகவும் உள்ளார் யுகபாரதி.
கவிஞர் யுக பாரதிக்கு பத்தாண்டுகளின் சிறந்த பாடல் ஆசிரியர் விருதை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது நியூஸ் 18 தமிழ்நாடு..
.