`கொலை மிரட்டல்கள் வருகிறது’ – இயக்குநர் கோபி நயினார்… காட்டூர் ஏரி `மண்’ விவகார பின்னணி | Kattur lake sand mining issue: Mob threatens to kill director Gobi Nainar? CM Stalin take Action?

இந்தநிலையில்தான், அறம், மனுசி படங்களின் இயக்குநர் கோபி நயினார், காட்டூர் ஏரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கைவைத்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டிருக்கிறார்,

அந்த வீடியோவில், “தமிழ்நாட்டின் மிக முக்கியமான 10 ஏரிகளில் ஒன்று எங்கள் கிராமத்தின் காட்டூர் ஏரி. இந்த ஏரியை நம்பிதான் இங்கிருக்கும் பல்வேறு கிராம மக்கள் விவசாயம் செய்து, வாழ்ந்துவருகின்றனர். குடிநீர் தேவை மட்டுமல்லாமல் அனைத்துக்கும் இந்த ஏரிதான் எங்களுக்கு மூலதனம். தற்போது இந்த ஏரியில் மண் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மண் எடுக்கக்கூடாது என கோரிக்கை வைத்து நானும் என் கிராமமக்களும் போராட்டம் நடத்தியதோடு மட்டுமல்லாமல் தாசில்தார், நீர்வளத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் என அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் மனு கொடுத்துவிட்டோம். ஆனால், மக்களின் ஜனநாயக உரிமைகளை மதிக்காமல் அதிகாரிகள் செயல்பட்டுவருகிறார்கள். காட்டூர் ஏரி மட்டுமல்ல பொன்னேரி தொகுதியைச் சுற்றியுள்ள எல்லா ஏரிகளிலும் மண் எடுக்க கைவைத்து வருகிறார்கள். சாலைகள் போடுவது, கட்டடங்கள் கட்டுவது மட்டும்தான் நாட்டின் வளர்ச்சியா? விவசாயத்தின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சி இல்லையா? விவசாயத்திற்கு நீராதாரமான ஏரிகளை அழித்து மண் எடுப்பது நியாயமா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

காட்டூர் ஏரில் மண் அள்ள வந்த பொக்லைன் காட்டூர் ஏரில் மண் அள்ள வந்த பொக்லைன்

காட்டூர் ஏரில் மண் அள்ள வந்த பொக்லைன்

மேலும், “உலகம் முழுக்க நாம் தமிழர்கள், திராவிடர்கள் என நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறோம். அப்படிப்பட்ட தொன்மையான சமூகத்தின் அறிவுச்சொத்தான நம் முன்னோர்கள் உருவாக்கிய ஏரிகளை நிர்மூலமாக்குவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. மண் எடுக்க எத்தனையோ இடங்கள் இருக்கும்போது, எங்கள் ஊர் மக்களிடம் கருத்து கேட்காமல், எங்களுக்கே விருப்பம் இல்லாமல் எங்களை மீறி எங்கள் ஏரிகளில் மண் எடுக்க வருகிறார்கள். இந்த ஏரியில் மண் எடுக்கப்பட்டால் ஒட்டுமொத்த ஏரியும் வறண்டு விவசாயம் பாதிக்கப்படும். எங்கள் ஊர் மக்கள் முதல் கால்நடைகள், பறவைகள், சிறுசிறு உயிர்கள் வரை குடிநீருக்குத் திண்டாடும் நிலை ஏற்படும். எனவே, தயவுசெய்து எங்களின் காட்டூர் கிராமத்தின் ஏரியை மண் எடுப்பதிலிருந்து காப்பாற்றித்தர வேண்டும் என தமிழக முதலைச்சர் ஐயா ஸ்டாலினுக்கு பணிவான கோரிக்கையை முன்வைக்கிறேன்!” எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார் இயக்குநர் கோபி நயினார்.

காட்டூர் ஏரியில் இயக்குநர் கோபி நயினார் காட்டூர் ஏரியில் இயக்குநர் கோபி நயினார்

காட்டூர் ஏரியில் இயக்குநர் கோபி நயினார்

இதுகுறித்து இயக்குநர் கோபி நயினாரை நாம் தொடர்புகொண்டு பேசியபோது, “காட்டூர் கிராமம் நான் பிறந்து வளர்ந்த என் சொந்த ஊர். காட்டூர் ஏரிதான் எங்களுக்கு எல்லாமே. ஆனால், அரசு அதிகாரிகளும் கார்ப்பரேட் முதலாளிகளும் சேர்ந்துகொண்டு எங்கள் ஏரியில் மணல் அள்ள முயற்சித்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடிவருகிறேன். தெரியாத எண்களிலிருந்து அடையாளம் தெரியாத பலரும் எண்ணைத் தொடர்புகொண்டு `எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளுங்கள் சார்… இதிலிருந்து விலகிக்கொள்ளுங்கள்’ என என்னிடமே பேரம் பேசுகிறார்கள். நான் கடுமையாகப்பேசி மறுப்பு தெரிவித்து, தொடர்ந்து மக்களுக்காகவும் ஏரிக்காகவும் போராடி வருகிறேன். இந்தநிலையில், இதேபோன்ற பல எண்களிலிருந்து எனக்கு அழைத்துப் பேசி கொலைமிரட்டல் விடுக்கிறார்கள். இதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்துவருகிறோம். காட்டூர் ஏரியிலிருந்து மண் எடுப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்!” என கொந்தளிப்புடன் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *