மக்களவை தேர்தலில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மகாராஷ்டிராவில் படுதோல்வியை சந்தித்துள்ளது. அதேசமயம் யாரும் எதிர்பாராத விதமாக சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியால் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலர் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு சரத் பவார் கட்சியில் இணைய முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து சரத் பவாரின் உறவினர் ரோஹித் பவார் அளித்த பேட்டியில்,” தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்த பிறகு சில எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்கள் கட்சி நிறுவனர் சரத் பவாருக்கு எதிராக மோசமாக பேசவில்லை. அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 18 முதல் 19 எம்.எல்.ஏ.க்கள் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர இருக்கின்றனர்.
சட்டமன்றத்தின் மழைக்காலக்கூ ட்டத்தொடர் முடிந்த பிறகு தொகுதிகளுக்கு மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்ட பிறகு இது நடக்கும். இதில் யாரை கட்சியில் சேர்க்கவேண்டும் என்பது குறித்து கட்சி தலைவர் சரத் பவார் முடிவு செய்வார். அடுத்த மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று பிரபுல் பட்டேல் கூறுகிறார். அப்படியென்றால் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை பிரபுல் பட்டேல்தான் வைத்திருப்பதாக தெரிகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியை அஜித் பவார் வளர்ச்சிப் பணிகளுக்காக உடைத்தாரா அல்லது பிரபுல் பட்டேலை அமலாக்கப் பிரிவிடமிருந்து காப்பாற்ற உடைத்தாரா என்று பார்க்கவேண்டியிருக்கிறது” என்றார்.
மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 27ம் தேதி தொடங்கி ஜூலை 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுவே சட்டமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் ஆகும். அதன் பிறகு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுவிடும். தேசியவாத காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்களும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.