தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. தேனி எஸ்.பி.நடவடிக்கை.
பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் குறித்து அவதூறு பேசியதாக கடந்த மே 4 ஆம் தேதியன்று தேனியில் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கரை கோயமுத்தூர் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். அப்போது சவுக்கு சங்கர் கார் மற்றும் தங்கியிருந்த அறையில் தேனி போலீசார் சோதனை செய்ததில், அங்கிருந்து 409 கிராம் கஞ்சா இருப்பது கண்டறிந்து கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து அவரது உதவியாளரான இராமநாதபுரம் – ராம்பிரபு, கார் ஓட்டுநரான சென்னை – இராஜரத்தினம் ஆகிய இருவர் தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சவுக்கு சங்கர் உள்ளிட்டோர் மீதும் பழனி செட்டி பட்டி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதன் தொடர்ச்சியாக அவருக்கு கஞ்சா விநியோகம் செய்ததாக, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன் மற்றும் பாலமுருகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு மதுரையில் போதைப்பொருட்கள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் தேனியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையில், ஆட்சியர் ஷஜீவனா உத்தரவில் சவுக்கு சங்கர் மீது இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து வதந்தி பரப்பி தமிழக அரசுக்கு எதிராக பொதுமக்களை போராட தூண்டியதாக சவுக்கு சங்கர் மீது சென்னை மாநகர ஆணையர் உத்தரவில் பதியப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டம் சென்னை உயர்நீதிமன்றத்தால் அண்மையில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
.