சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மீது போலியான ஆதாரங்களை உருவாக்குதல் உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆனால், சிலை கடத்தலில் ஈடுபடும் அனைவரும் தனக்கு எதிராக சேர்ந்துவிட்டதாக பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன். மாணிக்கவேலுக்கு எதிராக, அதே பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றி இடைநீக்கம் செய்யப்பட்ட காதர் பாஷா வழக்கு தொடுத்திருந்தார்.
அதில், தன்னை பழிவாங்கும் நோக்கில், சிலை கடத்தலுக்கு தான் உடந்தையாக இருந்ததாக, பொன். மாணிக்கவேல், பொய்யாக வழக்குப்பதிவு செய்ததாக குற்றம்சாட்டிய காதர் பாஷா, பொன். மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக இருந்த போது சிலை கடத்தல்காரர்களுடன் சேர்ந்து கூட்டு சதியில் ஈடுபட்டதாக கூறியிருந்தார்.
இரு அதிகாரிகளும் மாறி மாறி குற்றம்சாட்டியதால், இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள பொன்.மாணிக்கவேலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். டெல்லியில் இருந்து வந்திருந்த பத்துக்கு மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் ஏழரை மணி நேரம் சோதனை நடத்தினர்.
வீட்டில் இருந்த பொன்.மாணிக்கவேலிடமும் விசாரணை நடத்திய அதிகாரிகள், இரண்டு பைகளில் ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.மாணிக்கவேல், இந்த வழக்கிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எந்த தடையும் தான் கேட்கவில்லை எனவும், சிபிஐ விசாரிப்பதற்காக தன்னிடம் இருந்த ஆவணங்களை கொடுத்ததாகவும் கூறினார். மேலும், சிலைக்கடத்தல் குற்றவாளிகள் அனைவரும் தனக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
கோயில்கள் தற்பொழுது பாதுகாப்பாக இல்லை என குறிப்பிட்ட பொன்.மாணிக்கவேல், எந்த நிலையிலும் அரசியல் கட்சியில் சேரும் எண்ணம் தனக்கு இல்லை என தெரிவித்தார். இதனிடையே, கடந்த வியாழக்கிழமை, பொன்.மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, காதர் பாஷா அளித்த புகாரில் முகாந்திரம் இருப்பதால் வழக்குப்பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள சிபிஐ, தவறான தகவலை அளித்தல், பொய்யான ஆதாரங்களை உருவாக்குதல், ஒருவரை மிரட்ட போலியான ஆவணங்களை அளித்தல், ஒருவருக்கு எதிராக குற்றச்சதி செய்தல் உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் பொன். மாணிக்கவேல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
.