நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடியும் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தேசிய கொடியை ஏற்றுகின்றனர். தேசிய கொடியை மாநில முதலமைச்சர்கள் ஏற்றும் உரிமை எப்போது கிடைத்தது தெரியுமா?
பட்டொளி வீசி பறக்கும் நம் தேசியக் கொடி, நாட்டின் அடையாளம் மட்டுமல்ல. மாநில அரசுகளின் அங்கீகாரமும் கூட. சுமார் 250 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் பறந்து கொண்டிருந்த ஆங்கிலேயர் கொடிக்கு பதிலாக, 1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது, முதல் முறையாக எழுச்சியுடன் பறந்தது நம் தேசியக் கொடி.
அன்று தொடங்கி ஒவ்வொரு குடியரசுத் தினத்தை போலவே சுதந்திர திருநாளன்றும் மாநில ஆளுநர்களே தேசியக் கொடியை ஏற்றினர். அதெல்லாம், 1973 வரை மட்டும் தான்.
இதையும் படிக்க:
இந்தியாவிற்கு சுதந்திர தினமாக ஆகஸ்ட் 15-ஐ தேர்வு செய்ய காரணம் என்ன தெரியுமா?
அதன் பிறகுதான் நாடு முழுவதும் சுதந்திர தினத்தின் போது, முதலமைச்சர்கள் தேசியக் கொடி ஏற்றும் உரிமையை பெற்றனர். அன்று தொடங்கிய முதலமைச்சர்கள் தேசியக் கொடி ஏற்றும் உரிமை, 50 ஆண்டுகள் எனும் பொன்விழாவை எட்டியிருப்பதற்கு பின்னால் ஒலிக்கும் பெயர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி தான்.
1969-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற விழாவில் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, சுதந்திர தினத்தில் மாநில முதலமைச்சர்கள் தேசிய கொடியை ஏற்றும் உரிமையை ஏன் முதலமைச்சர்களுக்கு வழங்க கூடாது என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, பிரதமர் இந்திராகாந்திக்கு கடிதங்களை எழுதியதுடன், நேரிலும் சந்தித்து வலியுறுத்தினார். மாவட்ட ஆட்சியர்கள்கூட தேசியக் கொடி ஏற்றும் போது, முதலமைச்சர்களுக்கு ஏன் அந்த உரிமை இல்லை என்பதுதான் மாநில உரிமைக்கு குரல் கொடுத்த முதலமைச்சர் கருணாநிதியை உசுப்பியது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டுவர, ஒருவழியாக பல்வேறு விவாதங்களுக்கு பிறகு, தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை ஏற்று ஆண்டுதோறும் குடியரசுத் தினத்தன்று ஆளுநர்களும், சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்களும் தேசிய கொடியை ஏற்றுவார்கள் என மத்திய அரசு ஆணை பிறப்பித்தது.
அதன்படி 1974 ஆகஸ்ட் 15 அன்று செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் கருணாநிதி. மாநில முதலமைச்சர்கள் தேசிய கொடியேற்றும் உரிமையை கருணாநிதி பெற்றுதந்த 50ஆம் ஆண்டு இது. அதே இடத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றியிருக்கிறார்.
சுதந்திர திருநாள் ஒவ்வொருவருக்கும் விடுதலை நாள் என்றால், முதலமைச்சர்களின் உரிமையை கருணாநிதி சாத்தியப்படுத்திய நாளும் இன்றுதான்.
.