ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, சிறையில் இருக்கும் ரவுடி நாகேந்திரன் கைது செய்யப்பட்டது, சம்போ செந்திலை பிடிக்க தனிப்படை காஷ்மீர் விரைந்தது என காவல்துறையினர் விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அடுத்தடுத்து பல ரவுடிகளும், பல்வேறு கட்சியினரும் கைது செய்யப்பட்ட நிலையில், 2- நாட்களுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியில் இருந்த அஸ்வதாமன் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, அவரது தந்தையும், ரவுடியுமான நாகேந்திரன் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 24-ஆவது நபராக கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ள நாகேந்திரனை கைது செய்ததற்கான ஆணையை சிறை நிர்வாகத்திடம் சென்னை காவல்துறையினர் வழங்கினர்.
முன்விரோதம் காரணமாக சிறையில் இருந்தவாறே நாகேந்திரன் சதித் திட்டம் தீட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், அவ்வப்போது சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு வரும் நாகேந்திரன், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்படுவதற்கு முந்தைய ஒரு மாதத்தில் 3 முறை சென்னை வந்ததாகவும், மருத்துவமனைக்குச் சென்று நாகேந்திரனை சிலர் சந்தித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: சமஸ்கிருத கல்வெட்டால் புதிய சர்ச்சை… திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு!
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில் பகுஜன் சமாஜ் கட்சியினரும், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும், சின்னஞ்சிறு குழந்தையும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டும் என முழக்கமிட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், ஆம்ஸ்ட்ராங் உடன் இருந்தவர்களே அவரது கொலைக்கு உறுதுணையாக செயல்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். போராட்டத்தில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆனந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் உணர்ச்சி பொங்க பேசிய போது, ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி கலங்கியது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்தில் காஷ்மீரில் பதுங்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. வட இந்தியாவில் அவர் தலைமறைவாக இருக்கலாம் என கருதப்படும் நிலையில், மும்பை, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தனிப்படையினர் தேடியும் அவர் சிக்கவில்லை. இந்த நிலையில், காஷ்மீரில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்த ரவுடி ஒருவரின் உறவினர் பாதுகாப்பில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனிப்படை காஷ்மீருக்கு விரைந்துள்ளது.
இது ஒருபுறமிருக்க, ரவுடிகள் நாகேந்திரன் மற்றும் சம்போ செந்திலுக்காக பல வழக்குகளில் ஆஜரான பாஜக நிர்வாகிகளில் ஒருவரான பால் கனகராஜிடம் காவல்துறையினர் 7 மணி விசாரணை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சம்பந்தமில்லை என்றார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், ரவுடிகள் என பல தரப்பட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். ரவுடி நாகேந்திரன் 24ஆவது நபராக கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் 6 பேர் வழக்கறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
.