திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வேட்பாளராக திமுகவைச் சேர்ந்த கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். சைக்கிளில் வலம் வந்த சாமானிய தொண்டன், மாநகராட்சி மேயர் பதவிக்கு தேர்வானது எப்படி?
குறுகலான தெருவில் ஒரு சாதாரண வீடு, மக்களின் குறைகளை கேட்டறிய ஒரு பழைய ஹெர்குலஸ் சைக்கிள். இந்த எளிமைதான் கிட்டு என்கிற ராமகிருஷ்ணனை மாநகராட்சி மேயர் பதவியை அலங்கரிக்க அழைத்துச் சென்றிருக்கிறது.
திருநெல்வேலி டவுன் பகுதியில் உள்ள வேணுவன குமார கோவில் தெருவில் வசித்து வரும் ராமகிருஷ்ணனுக்கு, காந்திஸ்வரி என்ற மனைவியும், மகாராஜன் என்ற மகனும் உள்ளனர். 15 வயதிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட இவர், கடந்த 1980 ஆம் ஆண்டில் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர், 1984ல் நெல்லை நகராட்சி பதினாறாவது வார்டு துணை செயலாளராகவும், 1987ல் முதன் முதலாக நகராட்சி திமுக வட்ட செயலாளராகவும் பதவி வகித்தவர். திருநெல்வேலி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு 10 ஆண்டுகளுக்கு மேலாக 52வது வார்டு கழக செயலாளராக பணியாற்றியுள்ளார்.
இதையும் படிக்க:
திமுக ஆட்சியில் தமிழ்நாடு கொலைக்களமாக மாறியுள்ளது – ஈபிஎஸ்
கடந்த 2011 ஆம் ஆண்டு 52வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு முதன் முறையாக திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக தேர்வானார். கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற திருநெல்வேலி மாநகராட்சி தேர்தலில், வார்டு மறுவரையறை காரணமாக 25வது வார்டாக மாற்றப்பட்ட அவரது வார்டில், மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று மாமன்ற உறுப்பினரானார் ராமகிருஷ்ணன்.
வட்டக் கழகச் செயலாளர், இருமுறை மாமன்ற உறுப்பினர் என பதவி வகித்தாலும், 35 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய ஹெர்குலஸ் சைக்கிளில் சென்றே, வார்டு மக்களின் குறைகளை கேட்டு வந்துள்ளார் கிட்டு. திமுகவின் கொடியிலுள்ள கருப்பு சிவப்பு நிறத்தில் சைக்கிளின் இருக்கையை அமைத்துள்ள அவர், 5 கிலோ மீட்டர் வரை பயணிக்க சைக்கிளையும், அதற்கு மேல் ஒரே நபரின் வாடகை ஆட்டோவையும் பயன்படுத்தி வருகிறார்.
எளிதில் அணுகக்கூடிய சாதாரண நபராக இருக்கும் ராமகிருஷ்ணன், நெல்லை மாநகராட்சி மேயராகவிருப்பது, தங்கள் பகுதிக்கு கிடைத்த சிறப்பாக கருதுவதாக தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
நெல்லை மாநகராட்சியில் திமுகவிற்கு அறுதிப் பெரும்பான்மை இருப்பதால் ராமகிருஷ்ணன் மேயராவது உறுதியாகி உள்ளது. பல ஆண்டுகள் வட்டக் கழகச் செயலாளர், ஏழு ஆண்டுகள் மாமன்ற உறுப்பினராக இருந்தும் சைக்கிளிலேயே பயணித்த ராமகிருஷ்ணன், மேயராக முறைப்படி பதவியேற்றதும், தமிழ்நாடு அரசு சின்னம் பொறித்த, திருநெல்வேலி மாநகராட்சியின் இன்னோவா காரில் பயணிக்க இருக்கிறார். உண்மையான உழைப்பு மனிதனை வாழ்வில் உயர்த்தும் என்பது ராமகிருஷ்ணன் மூலம் நிரூபணமாகியுள்ளது என்றால் மிகையல்ல.
.