தஞ்சை: பேராவூரணி பேரூராட்சியில் முறைகேடு புகார்; சிக்கலில் திமுக சேர்மன்? – பின்னணி என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகர தி.மு.க செயலாளராக இருப்பவர் சேகர். இவரது மனைவி சாந்தி, பேராவூரணி பேரூராட்சித் தலைவராக இருக்கிறார். சாந்தியின் மாமனார் செல்வராஜ் தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க-வின் முன்னாள் துணை செயலாளர். இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து விதிகளை மீறி பேரூராட்சியில் முறைகேடு செய்திருப்பதாக தி.மு.க-வைச் சேர்ந்த முதல்நிலை அரசு ஒப்பந்ததாரரான செந்தில்குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக பேரூராட்சி இயக்குநர் கிரண் குராலா ஆய்வு செய்து முறைகேடு நடந்திருப்பதாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருப்பதாக வெளியான தகவல், தி.மு.க வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர்

இது குறித்து செந்தில்குமாரிடம் பேசினோம். “பழைய பேராவூரணி, தெப்பக்குளத் தெரு, மேலத்தெரு ஆகிய இடங்களில் அமைக்கபட்ட பேவர் ப்ளாக் சாலை, தார் சாலை அமைத்தல், சுகாதார வளாகம் கட்டுதல், பாலம் கட்டுதல், வார்டுகளில் பெட்மிக்ஸ் மண் அடிக்காமலேயே அடித்தது பல பணிகளில் பேராவூரணி பேரூராட்சியில் ஊழல் நடந்துள்ளது. பேரூராட்சி சேர்மன் சாந்தி சேகர், அவர் மாமனார் செல்வராஜ் தலைமையில் பேரூராட்சியில் பல கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. இதற்கு முன்னாள் செயல் அலுவலர் பழனிவேலும் உடந்தையாக இருந்துள்ளார்.

இது குறித்து நான், உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தேன். எனது மனுவை விசாரித்த நீதிபதி, ஊழல் புகார் குறித்து விசாரணை செய்து 12 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய அரசு முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயலாளர் கார்த்திகேயனுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் பேரூராட்சி இயக்குநர் கிரண் குராலாவிற்கு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தினார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இரண்டு நாள்கள் பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி இயக்குநரக அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

வழக்கு தொடர்ந்த செந்தில்குமார்

இதன் அறிக்கையை 29.1.2024 அன்று பேரூராட்சி இயக்குநர், கார்த்திகேயனிடம் சமர்ப்பித்துள்ளார். ஆனால் போரூரட்சி சேர்மன் உள்ளிட்ட யார் மீதும் எந்தவித நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை. அத்துடன் ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் இல்லை. இதைத் தொடர்ந்து நான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தேன். அதன் பிறகு பேரூராட்சி இயக்குநர் கிரண் குராலா ஆய்வறிக்கையை 27.06.2024-ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதில், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் பேரூராட்சி பெண் தலைவரின் கணவரும், மாமனாரும் செயல்பட்டு முறைகேடு செய்திருப்பது குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தெரியவருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஆய்வு அறிக்கையை நான் நீதிமன்றத்தின் பெற்றதன் மூலம் முறைகேடு நடந்திருப்பது உண்மை என்பது நிரூபணமாகியிருக்கிறது. தொடர்ந்து ஊழல் நடைபெறுவதாக நான் குற்றம்சாட்டி வந்த நிலையில் அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அரசுக்கு அவப்பெயர் உண்டாகும் நிலை ஏற்பட… நான் நீதிமன்றத்திற்கு சென்றேன். தற்போது போரூராட்சி இயக்குநரே ஊழல் நடந்திருப்பதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இனியும் காலம் தாழ்த்தாமல் அரசு இதில் தலையிட்டு பேரூராட்சி தலைவர் சாந்தி, அவரது கணவர் சேகர் மற்றும் செல்வராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு இதை செய்யும் என நம்புகிறேன்” என்றார்.

பேராவூரணி பேரூராட்சி தலைவரின் மாமனார் செல்வராஜ்

இது குறித்து செல்வராஜிடம் பேசினோம். “முறைப்படி, விதிப்படி அனைத்து பணிகளும் செய்யபட்டுள்ளது. இதில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை. தொடர்ந்து செந்தில்குமார் உள்கட்சி பிரச்னைகளை மனதில் வைத்துக்கொண்டு அவதூறுகளை பரப்பி வருகிறார். பேரூராட்சி தலைவரும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *