தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெய்த மழை காரணமாக, திற்பரப்பு அருவி, குற்றால அருவி, குரங்கு அருவி உள்ளிட்ட நீர்நிலைகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை கனமழை கொட்டியது. கூடலூரில் இரு வயல் கிராமத்தில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. ஒரு சில வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், கிராம மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். அவலாஞ்சி, அப்பர் பவானி பகுதிகளில் 10 மணிநேரத்தில் 12 சென்டிமீட்டர் மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால், மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 6872 கன அடியில் இருந்து 20,481 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் ஆலந்துறையை அடுத்த செம்மேடு பகுதியில் கனமழையால், மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால், மக்கள் வெளியேற முடியாமல் அவதிக்கு உள்ளாகினர். தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகர், பென்னாகரம், ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
இதையும் படிக்க:
காவிரி நதிநீர் பங்கீடு : அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி முடிவு!
கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மூன்று மணிநேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாது, நட்சத்திர ஏரி பகுதியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து உற்சாகமடைந்தனர்.
நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையால், ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் தவறி விழுந்த யானைக்குட்டி உயிரிழந்தது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று யானைக் குட்டிக்கு உடற்கூறு ஆய்வுசெய்து, சம்பவ இடத்திலேயே அடக்கம் செய்தனர்.
வால்பாறை சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால், ஆழியாரில் உள்ள குரங்கு அருவி எனப்படும் கவியருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, 3 ஆவது நாளாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகள் முழு கொள்ளளவை எட்டின. முதற்கட்டமாக பேச்சிப்பாறை அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, திற்பரப்பு அருவியிலும் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் குற்றால அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவியில் நீர் அதிகமாக விழும் நிலையில், கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி, சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் அருவியிலும் மறுஅறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் திருப்பூர், தேனி, திண்டுக்கல் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
.