தமிழக தொல்லியல் பணிகளுக்கு `சமஸ்கிருதம்’ கட்டாயமா? – சர்ச்சையும் பின்னணியும்!

தமிழக தொல்லியல் துறையில் உதவி காப்பாட்சியர் பணிக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டிருக்கிறது. அதில், சமஸ்கிருத பட்டப் படிப்புடன், திராவிட மொழிகள், பண்டைய இந்திய வரலாறு குறித்த அறிவு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று டி.என்.சி.எஸ்.சி அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறது.

டிஎன்பிஎஸ்சி அலுவலகம்

சமஸ்கிருதம் கட்டாயம் என்று கூறுவதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் பா.ம.க தலைவர் அன்புமணி, ‘இது ஒரு சமஸ்கிருதத் திணிப்பு’ என்று விமர்சித்திருக்கிறார். , நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், ‘சமஸ்கிருதம் தெரிந்திருப்பதுதான் தமிழ்நாட்டின் தொல்லியலை அறிந்துகொள்ள ஒரே தகுதியா.. தமிழ்நாடு தொல்லியல் துறைக்கும் சமஸ்கிருதத்துக்கும் என்ன தொடர்பு’ என்ற கேள்விகளை எழுப்புகிறார்.

புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தின் உதவி காப்பாட்சியர் பணிக்கான தேர்வில்தான் இந்தச் சர்ச்சை உருவாகியிருக்கிறது. இந்தப் பணிக்கு சமஸ்கிருதம் அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற வாதத்தை முன்வைப்பவர்கள், ‘தொல்லியல் துறை சார்பில் ஆய்வு செய்யப்படும் கல்வெட்டுகளில் கிரந்த எழுத்துகளின் பயன்பாடுகள் இருக்கும். ஆனால், தொல்லியல் அறிவும், தமிழ்ப் புலமையும் உள்ளவர்களால் கிரந்த மொழியை நன்றாக புரிந்துகொள்ள முடியும். எனவே, அதற்கு சமஸ்கிருதப் பட்டப்படிப்பு தேவையில்லை’ என்கிறார்கள்.

அன்புமணி ராமதாஸ்

மேலும், ‘தமிழகத்தில் தொல்லியல் துறையில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் எவரும் சமஸ்கிருதம் படித்து பணியில் சேரவில்லை. பணியில் சேர்ந்த பின் கிடைத்த அனுபவத்தின் மூலமாகவே கிரந்த எழுத்துகள் குறித்த அறிவை வளர்த்துக்கொண்டனர். தொல்லியல் துறை பணிகளுக்கான ஆள்தேர்வு விதிகளில்கூட சமஸ்கிருதம் கட்டாயம் என்று சொல்லப்படவில்லை’ என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

‘சமஸ்கிருதம் கட்டாயம் என்று கூறியிருப்பது அப்பட்டமான சமஸ்கிருத திணிப்பு’ என்று விமர்சிக்கிறார் பா.ம.க தலைவர் அன்புமணி. அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘சமஸ்கிருதம் வழக்கொழிந்த மொழி என்பதுதான் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு. அப்படி இருக்கும்போது, சமஸ்கிருத பட்டம் படித்தவர்கள் தமிழகத்தில் எங்கிருந்து கிடைப்பார்கள்? சமஸ்கிருதம் படித்தவர்களை தொல்லியல் துறையில் திணிப்பதற்காகவே இத்தகைய கல்வித் தகுதிகளை தமிழக அரசு திணிக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.

தொல்லியல்

எனவே, டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட ஆள்தேர்வு அறிவிக்கைகை உடனடியாக திரும்பப் பெற்று, சமஸ்கிருதம் கட்டாயத் தகுதி என்ற பகுதியை நீக்கிவிட்டு, தொல்லியல் மற்றும் செம்மொழி தமிழை கட்டாயத் தகுதியாக அறிவித்து புதிய அறிவிக்கையை வெளியிட வேண்டும்’ என்று அன்புமணி வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘யாருடைய உத்தரவின் பேரில் டி.என்.பி.எஸ்.சி-யின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது, முதல்வர் ஸ்டாலின் ஒப்புதலின் பேரில்தான் இது வெளியிடப்பட்டிருக்கிறதா, அப்படியென்றால், அமைச்சர் ரகுபதி கூறியது போல், உண்மையிலேயே ராமரின் ஆட்சியின் நீட்சிதான் தி.மு.க ஆட்சியா, திராவிட மாடல் என்பது உண்மையிலேயே சமூகநீதியா.. அல்லது மனு நீதியா’ என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

சீமான்

மேலும், ‘தொல்லியல் பணிக்கு திராவிட மொழி தெரிந்திருக்க வேண்டுமென்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருக்கிறது. அப்படி ஒரு மொழி இருக்கிறதா, தமிழ் மொழி என்று குறிப்பிடுவதில் தமிழக அரசுக்கு என்ன தயக்கம், திராவிட மொழி என்றால் அது எந்த மொழி என்பதை முதல்வர் ஸ்டாலின் விளக்க வேண்டும்.

அரசுப் பணியிலிருந்து தமிழை அகற்ற தி.மு.க அரசு முனைவது கொடுமை. எங்கும் தமிழ், எதிலும் தமிழ், வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்பதெல்லாம் தமிழர்களை ஏமாற்றும் வெற்று முழக்கங்கள் என்பது இதன் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, தமிழ்நாடு தொல்லியல் துறை பணிக்கு சமஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற்று, தமிழில் புலமை பெற்றிருக்க வேண்டும் என்ற அறிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும்“ என்கிறார் சீமான்.

இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அதிகாரியான கே.ஸ்ரீதரனிடம் பேசினோம். “நான், தொல்லியல் துறையில் அகழ்வாய்வுப் பணியில் ஈடுபட்டவன். நான் பணியில் சேர்ந்தபோது சமஸ்கிருதம் படிக்கவில்லை. ஆனாலும், பிறகு சமஸ்கிருத அறிவை வளர்த்துக்கொண்டேன். ஆனால், என்னுடைய பணியில் சேர்ந்த நண்பர்கள் பலர் டிப்ளோமா படிப்பு மூலம் சமஸ்கிருதம் கற்றிருந்தனர். கல்வெட்டுகளையும், செப்பேடுகளையும் படிப்பதற்கு சஸ்கிருதம் தெரிந்திருந்தால் எளிதாக இருக்கும்.

சமஸ்கிருத அறிவு இல்லாமலும் சமாளிக்க முடியும். அதே நேரம், சமஸ்கிருதம் தெரிந்திருந்தால், கல்வெட்டுகளைப் படிக்க உதவியாக இருக்கும் என்பது என் கருத்து. உதாரணமாக, சோழர் கால கல்வெட்டுகளில் சமஸ்கிருதத்தில் எழுதியிருப்பார்கள். அதன் பொருள் புரிய வேண்டும் என்றால், சமஸ்கிருத அறிவு தேவை.

தொல்லியல்

செப்பேடுகள் வடமொழியில்தான் இருக்கும். அதில், முன்னுரை சமஸ்கிருத்தில் இருக்கும். வரலாற்றுக்கு அடிப்படையான சான்றுகளைத் தெளிவுபடுத்த சமஸ்கிருத அறிவு கொஞ்சம் தேவைதான். பொருட்களைச் சேகரிப்பதும், அவற்றை காட்சிப்படுத்துவதும்தான் காப்பாட்சியர், உதவி காப்பாட்சியர் ஆகியோரின் முக்கியமான பணிகள். ஆகவே, இந்தப் பதவிகளுக்கு சமஸ்கிருதம் கட்டாயம் தேவை என்று சொல்ல முடியாது. அதே நேரம், சமஸ்கிருதம் தெரிந்தால், அவர்களுக்கு அது கூடுதல் தகுதியாக இருக்கும். சில இடங்களில் சமஸ்கிருதம் அவர்களுக்கு பயன்படவும் செய்யும்” என்கிறார் கே.ஸ்ரீதரன்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *