மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பட்ஜெட் மீதான இன்றைய விவாதத்தில் மத்திய பா.ஜ.க கூட்டணி அரசைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.
பட்ஜெட் தொடர்பாக மக்களவையில் இன்று மதியம் தனது உரையைத் தொடங்கிய ராகுல் காந்தி, “சிறு வணிகங்களைக் கடுமையாகப் பாதித்த வரி பயங்கரவாத பிரச்னையை இந்த பட்ஜெட் கவனிக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் 70 வினாத்தாள் கசிவு வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. இளைஞர்களைப் பாதிக்கும் இந்த வினாத்தாள் கசிவு விவகாரத்தை நிதியமைச்சர் குறிப்பிடவில்லை. மத்திய பட்ஜெட்டில் 20 அதிகாரிகள் பணியாற்றியிருக்கின்றனர். ஆனால், இதில், பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரும் இடம்பெறவில்லை. நாட்டின் மக்கள்தொகையில் 73 சதவிகிதம் கொண்ட இந்த மூன்று சமூகத்தினருக்கு பட்ஜெட்டில் எதுவும் கிடைக்கவில்லை.
விவசாய விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) இந்த அரசு சட்டபூர்வ உத்தரவாதம் அளிக்கவில்லை. மொத்தத்தில் இந்த பட்ஜெட், ஒரு சில குறிப்பிட்ட நபர்களின் ஏகபோக வணிகத்தை வலுப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. இந்தியாவில் அச்சம் நிறைந்த சூழல் நிலவுகிறது. அந்த அச்சம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவியிருக்கிறது. தற்போது பா.ஜ.க-வில் இருக்கும் பிரச்னை என்னவென்றால், ஒருவர் மட்டுமே பிரதமராக கனவு காண அனுமதிக்கப்படுகிறது.
ஒருவேளை, பாதுகாப்புத்துறை அமைச்சரே பிரதமாக வேண்டும் என முடிவுசெய்தாலும் அங்கு பெரிய பிரச்னை இருக்கிறது. அதுதான் பயம். நான் கேட்கிறேன், இந்தப் பயம் ஏன் இவ்வளவு ஆழமாகப் பரவுகிறது. பா.ஜ.க-விலுள்ள எனது நண்பர்கள், அமைச்சர்கள் பயப்படுகிறார்கள், விவசாயிகள் பயப்படுகிறார்கள், தொழிலாளர்கள் அச்சப்படுகிறார்கள்? மகாபாரத சக்ரவியூகத்தைப் போன்றதொன்று இந்த நாட்டில் இன்று இருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பான குருஷேத்திர போரில் சக்ரவியூகத்தில் ஆறுபேர் அபிமன்யுவை சிக்கவைத்துக் கொன்றனர்.
நான் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து பார்த்ததில், சக்ரவியூகம் என்பது பத்மவியூகம் என்றும் தெரிந்துகொண்டேன். அதாவது தாமரை உருவாக்கம். இந்தச் சக்ரவியூகம் தாமரை வடிவத்தில் இருக்கிறது. தற்போது, 21-ம் நூற்றாண்டில் தாமரை வடிவில் ஒரு சக்ரவியூகம் உருவாகியிருக்கிறது. அதன் தாமரை சின்னத்தை பிரதமர் தனது மார்பில் அணிந்திருக்கிறார். அன்று அபிமன்யுவுக்கு அந்த ஆறு பேரால் என்ன செய்யப்பட்டதோ, இன்று இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்களுக்கு செய்யப்படுகிறது. அன்று அந்த சக்ரவியூகத்தை ஆறு பேர் கட்டுப்படுத்தியதைப் போல இன்று நரேந்திர மோடி, அமித் ஷா, மோகன் பகவத், அஜித் தோவல், அம்பானி, அதானி ஆகிய ஆறு பேர் இந்த சக்ரவியூகத்தைக் கட்டுப்படுத்துகின்றனர்.
இந்த சக்ரவியூகத்துப் பின்னால் மூன்று சக்திகள் இருக்கின்றன. ஒன்று, ஏகபோக முதலாளித்துவ சிந்தனை. அதாவது, இரண்டு பேரை மட்டும் நாட்டின் முழு செல்வத்தையும் சொந்தமாக்க அனுமதிக்க வேண்டும். இரண்டாவது, சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற மத்திய ஏஜென்சிகள். மூன்றாவது, அரசியல் அதிகாரத்துவத்தினர். இந்த மூன்றும், சக்ரவியூகத்தின் மையத்தில் இருக்கின்றன. இவை இந்த நாட்டையே சீரழித்துவிட்டன. இந்த பட்ஜெட், சக்ரவியூகத்தின் சக்தியை பலவீனப்படுத்தி விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு உதவும் என்றும் நான் எதிர்பார்த்தேன். ஆனால், இந்த பட்ஜெட் ஜனநாயக கட்டமைப்பைச் சிதைத்து, குறிப்பிட்ட சிலரின் வணிக மற்றும் அரசியல் ஏகபோகத்தை வலுப்படுத்துவதாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
இதன் விளைவு, பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி, வரி பயங்கரவாதம் மூலம் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தாக்கப்பட்டன. இந்த பட்ஜெட்டுக்கு முன், நடுத்தர வர்க்கத்தினர் பிரதமர் மோடியை ஆதரித்தனர். அவரது உத்தரவின் பேரில், நடுத்தர வர்க்கத்தினர் கோவிட் சமயத்தில் தட்டுகளை வைத்து ஒலி எழுப்பினர். ஆனால், இந்த பட்ஜெட் மூலம் அதே நடுத்தர வர்க்கத்தினரை முதுகிலும் நெஞ்சிலும் குத்தி விட்டீர்கள்” என்றார்.
இந்த உரைக்கு மத்தியில் அதானி, அம்பானியைக் குறிப்பிட சபாநாயகர் மறுப்பு தெரிவித்தபோது ராகுல் காந்தி, “இரண்டு தொழிலதிபர்கள் இந்த நாட்டை கட்டுப்படுத்தி வருகின்றனர். அவர்களின் பெயரை அவையில் நான் பயன்படுத்தக் கூடாதென்றால், அவர்களை ஏ1 (A1), ஏ2 (A2) என்று குறிப்பிடுவேன்” என்று கூறினார். அப்போது நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அதை எதிர்த்தபோது, “மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஏ1, ஏ2-ஐ பாதுகாக்கிறார். அவர் அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவர் அதை செய்வார். ஏனெனில் அவருக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கிறது” என்று ராகுல் காந்தி எதிர்வினையாற்றினார்.