இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க மூத்த நிர்வாகிகள் சிலர், “கடந்த 2022-ம் ஆண்டு இல.கணேசன் இல்ல நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுத்தும் அண்ணாமலை செல்லவில்லை. அப்போது, “விழாவிற்குச் சென்று இருப்பேன். அந்த விழாவிற்கு மம்தா பானர்ஜி வந்ததால் அங்கே செல்லக்கூடாது என்ற எண்ணமும் இருந்தது. காரணம், மேற்கு வங்கத்தில் பா.ஜ.க-வினர் மம்தா பானர்ஜியால் மிகவும் மோசமாகத் துன்புறுத்தப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவித்திருந்தார். அதேபோல தானே பல்வேறு தருணங்களில் பா.ஜ.க-வினர் மீது தி.மு.க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அப்போதெல்லாம் விமர்சனம் செய்த அண்ணாமலை, இப்போது மட்டும் நாணயம் வெளியீட்டு விழாவுக்குச் சென்றதோடு, அதற்குச் சப்பைக்கட்டு காரணங்களையும் அடுக்குகிறார்.
‘டெல்லி கட்சித் தலைமை எடுத்த முடிவுக்கு அண்ணாமலை கட்டுப்பட்டு நடக்கிறார்’ என அவரது ஆதரவாளர்களும் காரணம் சொல்கிறார்கள். ‘2024 தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைப்போம்…’ என டெல்லி சொல்லியும்கூட, வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி, அ.தி.மு.க-வுடனான உறவைத் துண்டித்தவர் அண்ணாமலை. தவிர, டெல்லியிடம் அழுத்தம் கொடுத்து, தனியே ஒரு அணியை அமைத்து, கட்சியை நட்டாற்றில் விட்டவர். ‘அ.தி.மு.க உறவே வேண்டாம்’ என டெல்லி தலைமையிடம் முட்டி மோதத் தெரிந்த அண்ணாமலைக்கு, ‘என்னால் தி.மு.க அரசு நடத்தும் நாணயம் வெளியீட்டு விழாவுக்கு வர முடியாது..?’ எனச் சொல்லத் தெரியாதா..?
இதுகூட பரவாயில்லை… ‘அவிநாசி அத்திக்கடவு திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. குழாய் அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கான நிதி வழங்கவில்லை. தமிழக அணைகளைப் பாதுகாக்கக் குழு உருவாக்கவில்லை. பவானி சாகர், ஆழியாறு, திருமூர்த்தி, அமராவதி போன்ற அணைகள் போதிய பராமரிப்பின்றி இருக்கின்றன. எனவே ஆக.20-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்” என அண்ணாமலை அறிவித்தார். தற்போது, அந்தப் போராட்டத்தையே கைவிட்டுவிட்டார்.