மகாராஷ்டிரா மாநில அரசு, சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு 65 வயது வரையிலான ஏழைப்பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இத்திட்டத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து இருக்கிறது. ஆனால் இத்திட்டம் தொடர்ந்து இருக்குமா அல்லது தேர்தலுக்கு பிறகு நிறுத்தப்படுமா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இத்திட்டத்திற்காக ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் பதிவு செய்து கொண்டுள்ளனர். வரும் 17-ம் தேதி அனைத்து பெண்களின் வங்கிக் கணக்கிலும் 1,500 ரூபாய் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் தேர்தலில் தோல்வி அடைந்தால் அந்த பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்வோம் என்று பா.ஜ.க ஆதரவு எம்.எல்.ஏ ரவி ரானா தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்த நடிகை நவ்நீத் ரானாவின் கணவரான ரவி ரானா தொடர்ந்து மூன்று முறை பத்னேரா தொகுதியில் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வரும் தேர்தலில் பா.ஜ.க சார்பாக போட்டியிடுவார் என்று தெரிகிறது.
ரவி ரானா அளித்த பேட்டியில், “‘எங்களது அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இப்போது கொடுக்கும் 1,500 ரூபாயை 3,000 ரூபாயாக அதிகரித்து கொடுப்போம். அதற்கு உங்களது ஆசீர்வாதம் வேண்டும். அதேசமயம் எங்களுக்கு ஆதரவு கொடுக்காதவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து 1,500 ரூபாயை திரும்ப எடுத்துக்கொள்வோம்”என்று தெரிவித்துள்ளார். இக்கருத்தால் பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கு சிவசேனா(ஷிண்டே) செய்தித் தொடர்பாளர் தேவ்யானி, ரவி ரானாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அக்கருத்தில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் விஜய் இது குறித்து கூறுகையில், ”மகாராஷ்டிரா பெண்கள் தங்களது வாக்குகளை 1,500 ரூபாய்க்கு விற்பார்களா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ரவி ரானாவின் கருத்து முதல்வர் மற்றும் துணை முதல்வரின் மனநிலையை பிரதிபலிப்பதாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார். காங்கிரஸ் தொண்டர்கள் நாக்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்துள்ள விளக்கத்தில், “பெண்களுக்கு கொடுக்கப்படும் ரூ.1,500 திரும்ப பெறப்படமாட்டாது. சிலர் நாங்கள் பெண்களுக்கு லஞ்சம் கொடுப்பதாக சொல்கிறார்கள். சிலர் நாங்கள் ஓட்டை விலைக்கு வாங்குவதாக கூறுகின்றனர். இது போன்ற குற்றச்சாட்டுகளை கூறுபவர்கள் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். சகோதரிகளின் அன்மை விலை கொடுத்து வாங்க முடியாது” என்றார்.