55 வார்டுகளைக் கொண்ட நெல்லை மாநகராட்சி தி.மு.க வசம் இருந்தது. நான்கு அ.தி.மு.க உறுப்பினர்களைத் தவிர, எஞ்சியவர்கள் அனைவருமே தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சியினர். ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருந்தாலும், மேயராக இருந்த சரவணனுக்கும் கவுன்சிலர்களுக்கும் ஒத்துப் போகவில்லை. அதனால் சரவணன் ராஜினாமா செய்ததால், புதிய மேயர் தேர்வு செய்ய வேண்டிய நிலை உருவானது.
நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் அனைவருமே பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் மாவட்டச் செயலாளருமான அப்துல் வஹாப் ஆதரவாளர்கள். அதனால் புதிய மேயர் யார் என்பதை முடிவு செய்வதில் இழுபறி நீடித்தது. தற்போது தி.மு.க மாவட்டப் பொறுப்பாளராக உள்ள முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் தரப்பில் உலகநாதன் என்ற கவுன்சிலரை மேயராக்க முடிவு செய்திருந்தனர். ஆனால் அப்துல் வஹாப் தரப்பில் இருந்து ராமகிருஷ்ணன் பெயர் கட்சி மேலிடத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது
நாளை (ஆகஸ்ட் 5-ம் தேதி) மேயர் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மூத்த அமைச்சர்களான கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோரை கட்சித் தலைமை நெல்லைக்கு அனுப்பி வைத்தது.
நெல்லையின் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் கவுன்சிலர்களுடன் அமைச்சர்கள் இருவரும் ஆலோசனை நடத்தினர். அதில் பேசிய பலரும் வழக்கம் போலவே சைவ வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கே மேயர் பொறுப்பைக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதனால் சைவ வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், உலகநாதன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டன.
கவுன்சிலர்களில் பெரும்பான்மையினர் அப்துல் வஹாப் பரிந்துரைத்த ராமகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தனர். அதனால் மாவட்ட பொறுப்பாளரான டி.பி.எம்.மைதீன்கான் தனது பரிந்துரையான உலகநாதன் பெயரை விலக்கிக் கொள்வதாக தெரிவித்தார். அத்துடன், மாநகராட்சி விவகாரங்களில் இனி தாம் தலையிடப் போவதில்லை என்றும், அங்கு நடக்கும் எந்த விவகாரத்துக்கும் தனக்குப் பொறுப்பில்லை என்றும் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது.
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியளர்களிடம் கூட்டாகப் பேசிய அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர், “தி.மு.க-வின் நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணன் தேர்வாகியுள்ளார்” என்றார்கள். இது குறித்து தி.மு.க கவுன்சிலர்கள் நம்மிடம் பேசுகையில், “மூன்று முறை கவுன்சிலராக உள்ள ராமகிருஷ்ணன் அனுபவம் மிகுந்தவர். அனைவரிடமும் அனுசரித்துச் செல்லக்கூடியவர். மிகவும் எளிமையானவர். இப்போதும் சைக்கிளில் சென்று வார்டு மக்களின் குறைகளைக் கேட்கக்கூடியவர் அவருக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பது மிகவும் சரியானது” என்றார்கள்.