அரசுப் பள்ளிகளில் படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின்மூலம், 3 லட்சம் மாணவிகள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாயைப் பெற்று வருகின்றனர். மேலும், முந்தைய ஆண்டைவிட கடந்த ஆண்டில் அரசுப் பள்ளியில் படித்த 64 ஆயிரத்து 231 மாணவிகள் கூடுதலாக உயர்கல்வியில் சேர்ந்தனர்.
இதையும் படிக்க:
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
இதையடுத்து உயர்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் செயல்படுத்தப்படும் என்று நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தை கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “நேற்று இரவே பணத்தை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிட்டேன். நாள்தோறும் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றி இருந்தாலும் ஒரு சில திட்டங்கள் மனதுக்கு நெருக்கமாக, பெயர் சொல்லும் திட்டமாக இருக்கும். அப்படித்தான் ‘தமிழ்புதல்வன்’ திட்டம் இருக்கும்.
‘புதுமை பெண்’ திட்டம் போல ‘தமிழ்புதல்வன்’ திட்டம் மாணவர்களுக்கானது. ஒரு மாணவர்கூட உயர்கல்வி கற்காமல் திசைமாறி விடக்கூடாது. அனைவரும் உயர் கல்வி படிக்க வேண்டும். வறுமையில்லாத சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும். கல்விக்கு எதுவும் தடையாக எதுவும் இருக்கக் கூடாது. தடையா எது இருந்தாலும் அதை தகர்த்து எறிய உடன் இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
கலை அறிவியல், சட்டம், பொறியியல், மருத்துவம் படிக்கும் மாணவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம். இந்த திட்டத்திற்காக மொத்தம் 3.28 லட்சம் மாணவர்களுக்கு 360 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
.