முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, அ.தி.மு.க சந்தித்த அனைத்துத் தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்து வருகிறது. இதற்கு இரட்டைத் தலைமைதான் காரணம் எனச் சொல்லி, ஒற்றைத் தலைமையின் கீழ் வந்தது அ.தி.மு.க. ஆனாலும் அதன் தோல்வி முகம் மாறவில்லை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது அ.தி.மு.க. மாநிலத்தின் ஆட்சியில் இருந்த கட்சி இந்தளவுக்குப் பின்னடைவைச் சந்தித்தது பல்வேறு விமர்சனங்களை எழுப்ப, `பத்து தோல்வி பழனிசாமி’ என விமர்சனம் எழுந்தது.
அதையொட்டி வந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. அது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “தி.மு.க-வினரும், அமைச்சர்களும் ஆட்சி அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்துவதோடு, பணபலம் மற்றும் படைபலத்துடன் பல்வேறு அராஜக மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவார்கள். மக்களைச் சுதந்திரமாக வாக்களிக்கவிட மாட்டார்கள் என்பதால், இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாகக்” குறிப்பிட்டிருந்தார்.
இது, பா.ஜ.க மற்றும் பா.ம.க-வுக்கு உதவும் என விமர்சிக்கப்பட்டது. அதையடுத்து கட்சியில் தேர்தல் பணிகளைச் செய்யாதவர்கள்மீது முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன. அதன் உச்சமாக, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, நந்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன் ஆகிய ஆறுபேரும் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, சசிகலா உள்ளிட்டோரைக் கட்சியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்கள். ஆனால், எடப்பாடி அதனை மறுத்துவிட்டார்.
கட்சி நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்திலும் சசிகலா, ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், எடப்பாடி அதை மறுத்துக்கொண்டே இருப்பதாகச் சொல்கிறார்கள். அதிலும் சசிகலா பற்றி பிறகு பேசுவோம். ஆனால், பன்னீர்செல்வத்தைக் கட்சியில் இணைக்கவே முடியாது என வீம்பு பிடிக்கிறார் எடப்பாடி என்கிறார்கள். இதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்ற விசாரணையில் இறங்கினோம்.
டெல்டா பகுதி கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனையின்போது, முக்குலத்தோர் வாக்குகளுக்காக சசிகலா, பன்னீர்செல்வத்தைக் கட்சியில் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்க, எடப்பாடியோ, “சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தினகரன், வைத்திலிங்கம் உள்ளிட்டோருக்கு எக்காலத்திலும் அ.தி.மு.க-வில் இடமில்லை” என மறுத்துவிட்டார் என்கிறார்கள். அதையடுத்து ராமநாதபுரம் பகுதி நிர்வாகிகளும், “ராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பி.எஸ் அதிகமாகப் பணம் செலவழித்தார். அதுமட்டுமல்ல, முக்குலத்தோர் வாக்குகளும் ஓ.பி.எஸ் பக்கம் சென்றுவிட்டது. இதனால் கட்சி வேட்பாளர்கள் கடினமாக உழைத்தாலும் கூட ஓட்டு கிடைக்கவில்லை. எனவே, சசிகலாவைக் கட்சியில் இணைத்தால் நன்றாக இருக்கும்” என மேலும் அழுத்தமாக சொல்கிறார்கள்.
ஆனால், இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, “தேர்தல் தோல்விகளை மறந்து விடுங்கள். இனி கடினமாக உழையுங்கள். வரும் தேர்தலில் நாம் வெல்ல வேண்டும். கூட்டணியைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம். நிச்சயம் வலிமையான கூட்டணி அமைக்கப்படும்” எனச் சொல்லியிருக்கிறார். மேலும், `கட்சியைச் சீரழிக்கும் எண்ணம் கொண்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சியில் என்றும் இடமில்லை, சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து பிறகு பேசிக்கொள்ளலாம்’ என முடித்துக்கொண்டாராம்.
அப்படியானால் எடப்பாடியின் திட்டம்தான் என்ன எனச் சீனியர்களிடம் கேட்டோம், “சசிகலா, ஓ.பி.எஸ் கட்சியில் இணைந்தால் தன்னுடைய இடம் பறிபோகுமோ என்ற யோசனை எடப்பாடியிடம் இருக்கிறது. சசிகலாவைச் சேர்ப்பதில்கூட அவருக்குச் சிக்கல் இல்லை. ஏனென்றால் நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்ததால், அவரால் தேர்தலில் நிற்க முடியாது, அமைச்சர் உள்ளிட்ட எந்தப் பொறுப்புக்கும் உடனடியாக வர முடியாது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் எந்தப் பொறுப்பும் வேண்டாம் எனச் சொல்லி கட்சிக்குள் வந்தால் அவர் நிச்சயம் குடைச்சல் கொடுப்பார் என்ற எண்ணம் இருக்கிறது.
கடந்த கால பன்னீரின் வரலாறும் அதைத்தானே சொல்கிறது. எனவே, இவர்களைச் சேர்க்காமல் சிறுபான்மையினர் மற்றும் தலித் வாக்குகளைப் பெறுவதற்கான யோசனையில் இருக்கிறார். பா.ஜ.க-வுடன் இதே முரணைக் கடைப்பிடித்தால் இஸ்லாமிய, தலித் அமைப்புகள் தங்களுடன் கூட்டணி வைப்பார்கள் என்ற எண்ணம் இருக்கிறது. அதை வைத்துதான் 2026ல் வலுவான கூட்டணி அமையும் எனச் சொல்கிறார். கூட்டணியை வலுவாக அமைத்து 2026ல் வெற்றிபெற்றுவிட்டால் இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் முடிவு வந்துவிடும் என நினைக்கிறார்” என்கிறார்கள்.
இதற்கிடையே, பிரிந்தவர்கள் ஒன்றிணையாமல் அ.தி.மு.க-வால் வெற்றிபெற முடியாது என ஓ.பன்னீர்செல்வமும், அ.தி.மு.க-வுக்கு மீண்டும் திரும்புவேன் எனச் சொல்லி சசிகலா சுற்றுப் பயணமும் மேற்கொண்டிருக்கிறார். இதையெல்லாம் சமாளித்து எப்படித் தனித்து நிற்கப் போகிறாரோ எடப்பாடி எனக் கலக்கத்தில் இருக்கிறார்கள் தொண்டர்கள்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88