முஸ்லீம் வகுப்பினருக்கான இடங்கள் காலியாக இருந்தால் அந்த இடங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டு நிரப்பலாம் என்றும் உயர்கல்வித்துறையின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் இதே நடைமுறை தான் அரசு கலைக் கல்லூரிகளில் கடைபிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், அதற்கு மாறாக பட்டியலின/பழங்குடியின மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை வேறு எந்தப் பிரிவினரையும் கொண்டு நிரப்பக் கூடாது என்பது மிகவும் பிற்படுத்தப்பட்ட/பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.
இதன் மூலம், அவர்கள் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பு தடுக்கப்படும். இது மிகப்பெரிய சமூக அநீதி. உயர்கல்வித்துறையைப் பொறுத்தவரை அதன் செயலாளர் பிறப்பிக்கும் ஆணைதான் இறுதியானது. அதை மீறி, இப்படி ஒரு சமூகநீதிக்கு எதிரான ஆணையை பிறப்பிக்கக் கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சமூகநீதிக்கு எதிராக செயல்படுவதையே புதிய வாடிக்கையாகக் கொண்டிருக்கும் தி.மு.க அரசு, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு சமூக அநீதி இழைப்பதற்காகவே இப்படி ஓர் ஆணையை கல்லூரி கல்வி இயக்குநர் மூலம் பிறப்பிக்கச் செய்ததா என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.