பைடன் வெளியே… கமலா ஹாரிஸ் உள்ளே(?) – ட்ரம்புக்கு சாதகமா, பாதகமா?!

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதில், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியில் இருந்தார். திடீரென, சில காரணங்களால் போட்டியிலிருந்து விலகுவதாக பைடன் நேற்று (ஜூலை 21-ம் தேதி) அறிவித்தார்.

டொனால்டு ட்ரம்ப்

வயது முதிர்வு காரணமாக பைடனின் செயல்திறனில் தடுமாற்றம் ஏற்பட்டது. எனவே, போட்டியிலிருந்து அவர் விலக வேண்டுமென்று சொந்தக்கட்சியினரிடம் இருந்து அழுத்தம் வந்தது. இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு ஆளான ஜோ பைடன், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான், அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்திருக்கிறார்.

போட்டியிலிருந்து ஜோ பைடன் விலகுவதாக அறிவித்ததால், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு அவர் ஆதரவு தெரிவித்திருக்கிறார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ‘அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்பதே என் நோக்கம். ஆனால், ஜனநாயக கட்சியின் நலன், நாட்டின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அதிபர் தேர்தலிலிருந்து விலகுகிறேன். எனது முடிவு தொடர்பாக நாட்டு மக்களிடையே விரைவில் உரையாற்றுவேன்’ என்று கூறியிருக்கிறார்.

கமலா ஹாரிஸ்

ஜோ பைடன் வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘2020-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் நான் போட்டியிட்டபோது, கமலா ஹாரிஸை துணை அதிபராகத் தேர்வுசெய்ய வேண்டும் என்பது என் முடிவாக இருந்தது. தற்போது, அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் களமிறங்க வேண்டும். இதற்கு என் ஆதரவையும், ஒப்புதலையும் வழங்குகிறேன்’ என்று கூறியிருக்கிறார்.

ஜனநாயக கட்சியின் விதிகள்படி, போட்டியிலிருந்து விலகும் ஜோ பைடனால், அடுத்த அதிபர் வேட்பாளராக யார் இருப்பார் என்பதைக் கூறிவிட்டுச்செல்ல முடியாது. எனவே, அடுத்த வேட்பாளர் யார் என்பதை முடிவுசெய்வதற்காக ஆகஸ்ட் 19 முதல் 22-ம் தேதிவரை சிகாகோவில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவுசெய்யப்படும் என்று ஜனநாயக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

ட்ரம்ப், பைடன்

அதிபர் தேர்தலில் வேட்பாளரைத் தேர்வுசெய்ய ஒவ்வொரு மாகாணத்திலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு. அதில், ஜோ பைடனுக்குத்தான் பெரும்பாலான ஆதரவு கிடைத்தது. எனவே, வேட்பாளராக ஜோ பைடன் கைகாட்டும் நபரை அவ்வளவு எளிதாக கட்சி நிர்வாகிகளால் புறந்தள்ளிவிட முடியாது என்றும் சொல்லப்படுகிறது. எனவே, தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

இந்த நிலையில், ‘நேர்மையிலாத ஜோ பைடன் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தகுதியில்லாதவர்’ என்று குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் விமர்சித்திருக்கிறார். மேலும், ‘கமலா ஹாரிஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டால், பைடனைவிட கமலா ஹாரிஸைத் தோற்கடிப்பது எளிது’ என்று ட்ரம்ப் கூறியிருக்கிறார்.

கமலா ஹாரிஸ்

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக, கமலா ஹாரிஸ் பெயருடன் கலிஃபோர்னியா ஆளுநர் கவின் நியூசம், மிச்சிகன் ஆளுநர் கிரேட்சன் விட்மெர் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே நேரம், அமெரிக்காவின் அதிபர் பதவிக்கு, தெற்கு ஆசியாவைச் சேர்ந்த கமலா ஹாரிஸை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என்ற பேச்சு ஜனநாயக கட்சி வட்டாரத்தில் அடிபடுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ட்ரம்ப்

அந்த வகையில், தற்போதைய நிலவரப்படி பார்த்தால், கமலா ஹாரிஸை நிறுத்துவது டொனால்டு ட்ரம்ப்புக்கு சாதகமான சூழலை உருவாக்கலாம். குறிப்பாக, தன் பதவி காலத்தில் கமலா ஹாரிஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் செயல் எதையும் செய்யவில்லை என்ற பேச்சும் நிலவுகிறது. எனினும் தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ள சூழலில், பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் உள்ளதையும் மறுக்க முடியாது என்கிறார்கள் சர்வதேச அரசியல் விமர்சகர்கள்.

ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023 – Part 01 ஐ காண

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *