`பொதுவாழ்விலிருந்து விலகிய சசிகலா திரும்பவும் ரீ-என்ட்ரி என்கிறார்!' – சாடிய எடப்பாடி பழனிசாமி!

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூர் மற்றும் நாகையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் தஞ்சாவூர் ஆர்டிஓ அலுவலகம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார். இதைத் தொடர்ந்து மாலை அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “டெல்டா மாவட்டங்களில் ஒராண்டாக விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு, முழுமையாக தண்ணீர் கிடைக்காததால் 3 லட்சம் ஏக்கர் பயிர்கள் காய்ந்து, கருகி பெரும் நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்தனர். கடந்த மூன்று ஆண்டுளாக குறுவை சாகுபடியின் போது, இன்சூரன்ஸ் திட்டத்தில் விடியா தி.மு.க., அரசு விவசாயிகளை சேர்க்காத காரணத்தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு அ.தி.மு.க., ஆட்சியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் எடப்பாடி பழனிசாமி

தி.மு.க., அரசு அறிவித்துள்ள குறுவை தொகுப்பு திட்டத்தில் 78.67 கோடி ரூபாயை அறிவித்துள்ளது. இதில் 24.50 கோடி ரூபாயை நுாறு நாள் வேலை திட்டத்திற்கு ஓதுக்கீடு செய்து விட்டது. மீதம் உள்ள 54.17 கோடி ரூபாய் தான் விவசாயிகளுக்கு கிடைக்கும். தி.மு.க., கூட்டணியினர் கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 39 தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு சென்றனர். அப்போதே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய வைத்திருக்கலாம். தற்போது தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தி.மு.க., கூட்டணியினர் நாடாளுமன்றத்தில் போராடி அழுத்தம் கொடுத்து, மத்திய அரசை பணிய வைக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, திரவிட மாடல் ஆட்சி என கூறி, இங்கு போராட்டம் நடத்துவதால் என்ன பயன்? மக்களை ஏமாற்றுவதற்காக கண் துடைப்பு நாடகத்தைதான் தி.மு.க.,வினர் நடத்துகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40 பேர் சிகிச்சையில் உள்ளனர். மூன்று பேர் இறந்தாக கூறப்படுகிறது. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் கள்ளச்சாராயம் தொடர்கிறது. மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சோமண்ணா, முன்பு கர்நாடக அமைச்சராக இருந்தபோதே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆதரவாக பேசினார். இந்நிலையில் ஜல்சக்தி துறை மத்திய இணை அமைச்சராக அவரை நியமித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. தி.மு.க.,வுக்கு எதிரி அ.தி.மு.,கதான் என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஊடகத்தில் பரபரப்பாக வர வேண்டும் என்பதற்காக தி.மு.க.,வின் பி டீம் என என்னை தினகரன் கூறி வருகிறார். அவரை மக்கள் மறந்து விடுவார்கள் என்பதற்காக அப்படி கூறி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி

சசிகலாவின் ரீஎன்ட்ரி என்பது வேலைக்கு சென்றவர் மூன்று வருடம் சும்மா இருந்து விட்டு மீண்டும் வேலைக்கு வருவது போல்… 2021-ம் ஆண்டு சசிகலா பொதுவாழ்வில் இருந்து விலகி விட்டதாக சொன்னார். இப்போது ரீஎன்ட்ரி என்கிறார். இத்தனை ஆண்டாக கட்சியை காப்பாற்றியது தொண்டர்கள் தான். அ.தி.மு.க.,வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலம் முதல் சாதிக்கு இடமில்லை. அ.தி.மு.க.,வில் இஸ்லாமியர்கள் உள்பட அனைத்து சமூகத்தினரும் நிர்வாகிகளாக உள்ளனர். கொடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்து சிறையில் அடைத்தது அ.தி.மு.க., அரசுதான். அவர்களுக்கு ஜாமீன் கொடுத்தது தி.மு.க., அரசு. இதிலிருந்து கொடநாடு குற்றவாளிகளைக் காப்பாற்றுவது யார் என்பது தெரிய வரும்.

தி.மு.க., ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக எந்தப் புதிய திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட பாலம், மருத்துவமனை, கல்லுாரிகள் உள்ளிட்ட திட்டங்களைத்தான் முடித்து திறந்து வைக்கின்றனர். தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் இருந்த வளர்ச்சி இப்போது இல்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில் மூன்றரை லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். வெற்றி, தோல்வி என்பது மாறி மாறி வரும். தற்போது கூட்டணி இல்லாமல் ஒரு சதவீதம் ஓட்டு உயர்ந்துள்ளது. தி.மு.க.,விற்கு 6.5 சதவீத ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது. அ.தி.மு.க., வளர்ந்துக்கொண்டு தான் இருக்கிறது.

செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி

வரும் 2026-ம் ஆண்டில் அ.தி.மு.க., சிறப்பான கூட்டணியை அமைத்து, தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். ஓ.பி.எஸ்., எப்போதுமே அ.தி.மு.க.,வுக்கு விசுவாசமாக இருந்தது கிடையாது. எதிராகவும், சுயநலமாகவும் தான் செயல்படுவார். அவரை ஒரு தொண்டனும் மதிக்கமாட்டான். பலாப்பழத்தை வைத்து பூஜை செய்து எப்படியாவது வெற்றி பெற்று மத்திய அமைச்சராகி விடலாம் என கனவு கண்டார். கட்சிக்கு யார் துரோகம் செய்ததாலும் ஓ.பி.எஸ்., நிலைதான் ஏற்படும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *