ஓராண்டு மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்கள், பெற்றோர் அல்லது கணவர் வசிக்கும் ஊரிலேயே பணியாற்ற சலுகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் குடியரசுத் தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை பதக்கங்கள், முதலமைச்சர் பதக்கங்கள் காவலர்களுக்கு வழங்கப்பட்டன. ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 7 காவலர்களுக்கும், தீயணைப்பு துறையைச் சேர்ந்த 14 பேர் மற்றும் சிறைத்துறையைச் சேர்ந்த 8 பேருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து மிடுக்குடன் வந்த காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். மொத்தமாக 158 மத்திய அரசு பதக்கங்களும், 301 முதலமைச்சர் பதக்கங்களும் வழங்கப்பட்டன.
காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் கண்கவர் சாகசங்கள் அரங்கேறின. இருசக்கர வாகனங்களை கொண்டு நடைபெற்ற சாகசம் கண்களுக்கு விருந்து படைத்தது.
மக்களின் பாதுகாப்புக்காக, மாநிலத்தின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் உழைக்கும் காவலர்களுக்குப் பல்வேறு பதக்கங்களை வழங்கும் விழாவில், பெண் காவலர்களின் முக்கியக் கோரிக்கை ஒன்றை நிறைவேற்றும் அறிவிப்பை மனநிறைவுடன் வெளியிட்டேன்… 👇 pic.twitter.com/Gqq3HLByzb
— M.K.Stalin (@mkstalin) August 23, 2024
தொடர்ந்து மிடுக்கான அணிவகுப்பு அனைவரது கைத்தட்டல்களையும் பெற்றது. பயங்கரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகையும் மிரட்டலாக அமைந்தது.
ஓராண்டு மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்கள், பெற்றோர் அல்லது கணவர் வசிக்கும் ஊரிலேயே பணியாற்றும் சலுகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பெண் போலீசார் தங்களது குழந்தைகளை பராமரிப்பதற்காக புதிய சலுகைகளை அறிவித்த முதலமைச்சர், தமிழ்நாட்டில் குற்றங்கள் நிகழாமல் ஒவ்வொரு காவலரும் தடுக்க வேண்டும் எனவும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.
.